அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசையும், பாஜகவையும் விமர்சித்து கவிதை எழுதப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலிலும், ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் அணி என அனைவரும் ஒருமித்த ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில், மத்திய அரசையும், பாஜகவையும் விமர்சித்து கவிதை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், உதய் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு, ஜி.எஸ்.டி. வரிக்கு ஆதரவு, நீட் தேர்வு என மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நெருக்கடியில் யெளிய வேண்டிய நிலை ஏற்பட்டதாக நமது எம்ஜிஆரில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் கேட்டது எதுவும் கிடைக்கவில்லை; கெட்டது எதுவும் விலகவில்லை எனவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் மத்திய அரசு மீது விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

வெங்கய்யா நாயுடு விடுகதை சொல்வதாகவும், பொன். ராதாகிருஷ்ணன் புதுக்கவிதை சொல்வதாகவும் அந்த கவிதையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கழகங்களில்லா தமிழகம் எனக் கூறி கலர் கலரான கனவுகளில் காவிகள் துள்ளுவதாக பாரதிய ஜனதா மீது விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிதை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது