தற்போதைய சூழலில் எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான ஆக்கப்பூர்வ செயல் திட்டங்களை அனுப்ப வேண்டும் என வெளி நாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடிக்கு  பஞ்சாப் நேஷனல் வங்கி கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கடுமை காட்டாமல் மிகுந்த மென்மையான போக்கை வங்கி கடைப்பிடித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைரவியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி  கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை.

இந்த மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நிரவ் மோடி மீதும், அவரது உறவினர் மெஹல் சோக்ஸி மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை நாடு கடத்தி தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதகாக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், பஞ்சாப் நேஷனல்  வங்கிக்கு அண்மையில் நிரவ் மோடி ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். வங்கிக்கு தாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் ரூ.5,000 கோடிதான் என்றும், ஊடகங்கள் மற்றும் வங்கி நிர்வாகம் மேற்கொண்ட அவசர நடவடிக்கைகளால் தமது தொழில் முடங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பிஎன்பி வங்கி சார்பில் நிரவ் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.:

அதில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உறுதிச் சான்றினை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி நீங்கள் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளீர்கள். மேலும், வாங்கிய கடனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக அளித்த உத்தரவாதத்தின்படியும் நீங்கள் செயல்படவில்லை.

அதன் காரணமாகவே வங்கி சார்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய சூழலில் எவ்வாறு கடனைத் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் என்பது தொடர்பான ஆக்கப்பூர்வ செயல் திட்டங்களை அனுப்ப வேண்டும் என அந்த கடிதத்தில குறிப்பிடப்பட்டுள்ளது.