பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி  88 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுக 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக மோடி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார்.


அவருடன் மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஆகியோருக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


காங்கிரஸ் அணியில் உள்ள திமுகவுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின் சார்பில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.