தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்க அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வடிவமைப்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி மாவட்டம் தொப்பூரில் 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக் கொண்ட கொடிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையான குணமடைந்து, இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொப்பூரில் இன்று மாலை இரு சக்கர ஊர்தி மீது சிறிய சரக்குந்து மோதியதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சேலம் & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அனிவகுத்து நின்ற நிலையில், சரிவான சாலையில் வேகமாக வந்த சிமெண்ட் சரக்குந்து பின்புறமாக மோதியதில் பல வாகனங்கள் நசுங்கின. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான விபத்துகள் அங்கு நடந்துள்ளன. பெருமளவிலானோர் உயிரிழந்துள்ளனர். தொப்பூர் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்புதான் காரணமாகும். இந்த வடிவமைப்பை மாற்ற ஆணையிட வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், சாலையின் வடிவமைப்பை மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மறுத்து வருவதுதான் விபத்துகளுக்கு காரணமாகும்.

