இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்ற விமர்சனம் உள்ளது.

மாநிலங்களவையில் சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்த சட்டமுன் வடிவின் மீதான விவாதத்தில் அன்புமணி ராமதாஸ், கலந்து கொள்ளாமல், வாக்கெடுப்பின்போது மட்டும் கலந்து கொண்டு, இஸ்லாமியர்களுக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராகவும் - பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் வாக்களித்தார். மற்ற நாட்களில் அவர் அவைக்கு வந்ததாக தெரியவில்லை. அதுவே விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களில் வருகை குறித்த தகவல் வெளியானது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான அளவில் 15 நாட்கள் மட்டுமே வருகை பதிவேட்டில் பதிவானதாக தகவல் வெளியானது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர், வினோபா என்பவர் தலைமையில் டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, அங்குள்ள ஊழியர்களையும் செய்தியாளர்களையும் மிரட்டி பொருட்களை வாரி இறைத்து கலவரம் செய்துள்ளனர். “டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து எவ்வாறு செய்தி போடலாம்”என்று மிரட்டியுள்ளனர்.

பல்வேறு இதழ்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் உள்ள விவரங்கள், அவர்கள் ஆற்றிய உரைகள், அவர்கள் கேட்ட கேள்விகள், அவர்கள் முன்மொழிந்த தீர்மானங்கள் - சட்டமுன் வடிவுகள் ஆகியவற்றை தொகுத்து ஒவ்வொரு உறுப்பினர் பற்றியும், செய்தி வெளியிடுவது வழக்கமான நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.

என்னைப் பற்றிகூட, நான் எத்தனை நாள் கூட்டத் தொடரில் கலந்து கொண்டேன் - எத்தனை கேள்விகள் கேட்டேன் - எத்தனை முறை உரையாற்றினேன் என்ற விவரங்களை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு வார இதழில், அ.தி.மு.க. எம்.பி.,க்கள் 37 பேர்களின் நாடாளுமன்றப் பணிகள் குறித்து விரிவாக தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தார்கள். இது அவர்களின் உரிமை.

அதில் தவறு இருந்தால், அது தவறு என்று, ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, மறுப்பு செய்தி வெளியிடச் சொல்லலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் பிரதிநிதியான ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற கூட்டங்களையே புறக்கணிப்பதும், ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்வதும், அவர் மக்கள் பணியில் அக்கறை காட்டவில்லை என்பதையே நிரூபிக்கிறது.

உண்மையை உணர்ந்து, கலவரம் செய்தவர்கள் அவர்களுடைய கட்சியின் தலைவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் முழுமையாக பங்ககேற்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவதை விட்டுவிட்டு, அந்த உண்மைச் செய்தியை வெளியிட்ட பத்திரிகை அலுவலத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பது ஜனநாயகவிரோத, மக்கள்விரோத, பாசிச செயலாகும்.

இத்தகை செயல்களில் ஈடுபடுவோர்மீது தமிழக அரசு, பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தின்மீது எந்த காலத்திலும் பா.ம.க.வுக்கு நம்பிக்கையில்லை என்பதை பா.ம.க.வினரின் இந்த செயல் மீண்டும் உறுதிபடுத்துகிறது. பா.ம.க.வினரின் இத்தகு வன்முறைச் செயலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.