இந்நிலையில் பாமகவின் கொள்கை எதிரியாக பார்க்கப்படும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் இயல்புக்கு மாறாக பாமக நிறுவனர் ராமதாஸ் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக பேசக்கூடிய அரசியல் தலைவர் அல்ல, ஆனால் தனது பேச்சால் இளைஞர்கள் எளிதில் தூண்டும் சொல்லாற்றல் மிக்கவர் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வியந்து பேசியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமூகநீதி கோட்பாட்டில் தொடர்ந்து பயணித்திருக்கும்பட்சத்தில் அவர் இந்திய அளவில் கன்சிராம் போல ஒரு மிகப்பெரிய தலைவராக உருவாகி இருப்பார் என அவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இவ்வாறு பேசியுள்ளார். 1980களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக தான் நடத்திய வீரியமிக்க போராட்டத்தின் மூலம் தமிழகத்தின் சமூகநீதி காவலராக அறியப்பட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தற்போது அவருக்கு நேரெதிர் அரசியலில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவளால் தமிழ் குடிதாங்கி என புகழப்பட்டவர் ராமதாஸ். கல்வி, பொருளாதாரம் வேலை வாய்ப்பில் வன்னிய சமுதாயம் பின்தங்கி கிடப்பதை கண்ட அவர், வன்னிய சமுதாய அமைப்புகளை ஒன்று திரட்டி 1980இல் ஜூலை 20 ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டத்தைத் தொடங்கினார். அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20% இட ஒதுக்கீடி மத்தியில் 2% தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை 18 லிருந்து 22 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஒரு வாரம் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்து நடத்தியவர் அவர். அது 21 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தனர். அப்போதும் போராட்டம் வீரியம் குன்றாது நடந்தது. பதறிப்போன அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக போராட்டம் கைவிடப்பட்டது. 

பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக வன்னியர் சமுதாயம் உட்பட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பட்டியலில் இணைத்து 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. தொடர்ந்து சமூக நீதி, மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்த ராமதாஸ் 1889ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்தார். நானும் எனது குடும்பத்தாரும் எந்தப் பதவிக்கும் வரமாட்டோம் சட்டமன்றத்திற்குள் அல்லது நாடாளுமன்றத்திற்குள் என் கால் செருப்பு கூட செல்லாது. இது என் இறுதி மூச்சு வரையிலும் இருக்கும். நான் மறைந்த பின்னரும் இது அமலில் இருக்கும் என உறுதி பூண்டார். "ராமதாஸ் "என்ற தன் பெயரை தமிழ் படுத்தும் வகையில் "இராமதாசு" என மாற்றிக் கொண்டார். அவர் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் நிறுவும் திட்டத்தை அறிவித்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என குரல் எழுப்பினார் அவர். 1998-ல் கும்பகோணம் அருகில் உள்ள குடிதாங்கி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு தன் தோளில் சுமந்து சென்றார். அதனால் ராமதாசை தமிழ் குடிதாங்கி என்று திருமாவளவன் அழைத்தார்.

சமூகநீதி அரசியலிலும், சாதி ஒழிப்பு அரசியலிலும் மிகத் தீவிரமாக களம் கண்ட ராமதாஸ் காலப்போக்கில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது அச்சமூக மக்கள் மத்தியில் அவர் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. கூட்டணிக்காக கொள்கையை இழந்தவர் ராமதாஸ் என்ற விமர்சனத்திற்கு ஆளானார். இப்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறார். இது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கட்சி ஆரம்பித்து 35 ஆண்டுகளை கடந்துவிட்டது ஆனாலும் கூட பாமக ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது என்னுடைய தவறா? அல்லது தொண்டர்கள் ஆகிய உங்களுடைய தவறா? ஏன் நாம் கட்சி நடத்த வேண்டும்? கலைத்து விடலாம் என்று ஒருவித அழற்ச்சி, இயலாமை அவரது பேச்சில் தென்படத் தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்னர் பெரிய அளவில் எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த பாமகா, தற்போது ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாக கூறி நடிகர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. அரசியல் செய்வதற்கு வேறு வழியில்லாமல் பாமக சினிமா நடிகர்களை வம்புக்கு இழுக்கிறது என்ற விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது. 

இந்நிலையில் பாமகவின் கொள்கை எதிரியாக பார்க்கப்படும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் இயல்புக்கு மாறாக பாமக நிறுவனர் ராமதாஸ் புகழ்ந்து பாராட்டியுள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மருத்துவர் ராமதாஸ் ஆரவாரமான பேச்சாளர் அல்ல ஆனால் இளைஞர்களை தனது பேச்சால் தூண்டும் அளவிற்கு பேசும் ஆற்றல் வாய்ந்தவர் என கூறியுள்ளார். அந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:- ராமதாஸ் அரசியல் துவக்க காலத்தில் சமூக நீதி தலைவராக அறியப்பட்டார். அவரின் பிளஸ் என்று எடுத்துக்கொண்டால், அவர் ஆவேசமாக வைகோவை போலவோ, அலங்காரம் மொழிகளில் கலைஞரைப் போலவோ பேசக்கூடியவர் அல்ல. ஆனால் மிகவும் உணர்ச்சிகரமாக கூட்டத்தை தட்டி எழுப்பக்கூடிய பேச்சாளர். ராமதாஸ் " நிறுத்திப் பேசுவார்.. நறுக்குன்னு பேசுவார்.. அடித்துப் பேசுவார்.. ஆழமாக பேசுவார்" அவரால் மிகப்பெரிய மக்கள் திரளை தூண்ட முடியும் என்ற வகையில் பேசக்கூடியவர். ராமதாசை பொருத்தவரையில் மிக கட்சிதமான கணக்குப் போட்டு அரசியல் செய்யக்கூடிய ஒரு அரசியல்வாதி. 25 ஆண்டுகள் கழித்து என்ன நடக்கவேண்டும், 10 ஆண்டுகள் கழித்து என்ன நடக்க வேண்டும் என்பதை கணித்து அதற்காக இப்போதே வேலைகளை தொடங்க கூடியவர்.

மிகவும் சாதுரியமாக திமுகவையும், அதிமுகவையும் ஒரே நேரத்தில் கையாண்டவர். இங்கு இல்லை என்றால் அங்கு, அங்கு இல்லை என்றால் இங்கு என்கின்ற வகையில் இரண்டு கட்சிகளையும் டீல் செய்தவர் அவர். சந்தர்ப்பவாதமாக சாதுரியமாக செய்தார் என்பது காட்டிலும், இரண்டு கட்சிகளையும் தன்னுடைய கையில் இரண்டு பொம்மைகளை போல வைத்து விளையாடியவர் ராமதாஸ். அவர் மிகவும் சாமர்த்தியமானவர். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கரிவார் அமைப்புகளின் வலையில் அவர் சிக்கிக் கொண்டதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.