கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் ஆறு தொகுதிகளை ஒதுக்குவதாக பா.ம.கவிற்கு கடைசி ஆஃபரை அ.தி.மு.க தரப்பு சேதியாக அனுப்பியுள்ளது.
   
பா.ம.கவில் அன்புமணிக்கு அடுத்த நிலையில் இருப்பவரும், அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்க்கு அடுத்த நிலையில் இருப்பவரும் தான் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியை உறுதிப்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். அதிலும் அ.தி.மு.க தரப்பில் கூட்டணிக்காக பேசிக் கொண்டிருக்கும் நபர் பா.ம.க.வின் முக்கிய தலைவர்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர். 

கடந்த முறை தர்மபுரியில் அன்புமணி வென்று அ.தி.மு.க தோற்கவே இவர் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும் நடந்தேறியது. அந்த நபருக்காகத்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே அன்புமணி ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

கடந்த வாரம் வரை 5 தொகுதிகள் என்று அ.தி.மு.க அடம் பிடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தே.மு.தி.கவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், இதே போன்ற பா.ஜ.கவும் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதனால் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும். எனவே முடிந்த அளவிற்கு பா.ம.க மற்றும் தே.மு.தி.கவிடம் பேரம் பேசி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க அ.தி.மு.க பிரம்ம பிரயர்த்தனம் செய்து வருகிறது. 

எனவே கடைசியாக ஆறு தொகுதிகள் வரை தங்களால் ஒதுக்க முடியும் என்று அ.தி.மு.க தரப்பு பா.ம.கவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல் தொகுதிக்கு தங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்கிற விவரத்தை பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தில் கூறுவதாகவும் அ.தி.மு.க தரப்பு கூறியிருக்கிறது. இந்த தகவலை உடனடியாக அன்புமணியிடம் பாஸ் செய்திருக்கிறார்கள். அதற்கு அவசரம் வேண்டாம். பொறுமையாக பேசி முடிப்போம் என்று அன்புமணி கூறியதாக சொல்கிறார்கள். 

அதே சமயம் கூட்டணிக்கான கதவை தி.மு.க, தினகரன் உள்ளிட்டோருக்கும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ராமதாஸ் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள். யார் அதிக தொகுதி, யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் முடிவெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கறார் காட்டுகிறாராம்.  

இதனால் அ.தி.மு.க தரப்புக்கு அன்புமணியிடம் இருந்து கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைக்கு எந்த சிக்னலும் செல்லாது என்கிறார்கள். இருந்தாலும் பா.ம.கவை கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதால் அதற்கான வழிமுறைகளை தீவிரமாக ஆலோசிப்பதாக கூறுகிறார்கள். மேலும் ராமதாசையும் எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.