விருதுநகர் மாவட்டத்தில் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக பொருளாளர் திலகபாமா கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் இரண்டு இலக்கங்களில் இருந்த வைரஸ் தொற்று இப்போது 200, 300 என நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 1738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு கொரோனா சோதனைகள்  எடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே சோதனை முடிவுகள் வெளியிடப்படுகின்றன.அதுவும் சோதனை முடிவுகள்  வெளிவர 9 நாட்கள் வரை தாமதமாகிறது. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களை போல விருதுநகர் மாவட்டத்திலும் சமூக தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 11 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக்கான போதிய உபகரணங்கள் இல்லாத சூழலும் நிலவுகிறது. எனவே போதிய உபகரணங்களை அளித்து விருதுநகர் மாவட்டத்தில் சோதனைகளின் எண்ணிக்கையை ஒரு நாளுக்கு 5000ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மக்களிடையே சமூக இடைவெளி இதுவரை பேண படவில்லை. ஒரு வாரம் முழுமையான ஊரடங்கே தொற்று வேகமாக பரவுவதை தடுக்கும். அதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற இட வசதியும் விருதுநகர் மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. அதனால், மேலும் கோவிட் சிகிச்சை மையங்களுக்கு விரைந்து அனுமதி அளித்து கோவிட் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.