2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நீங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் மூத்த பாட்டாளி நான். நானும் இலக்கை அடைவதற்காக மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

பாட்டாளிகளாகிய நாம் உன்னதமான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தில் நாம் நொடிப்பொழுதும் சுணங்கிவிடக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் எழுதியுள்ள மடலில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள், மக்கள் சந்திப்புப் பணிகள், இரு சக்கர ஊர்திப் பேரணி பணிகள் என ஏராளமான பணிகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இடையறாத பணிகளில் மூழ்கியிருக்கும் உங்களை உற்சாகப்படுத்தவும், உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும்தான் இந்த பதிவு. பாட்டாளி என்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் என்று மட்டும் பொருள் அல்ல. பாட்டாளி என்றால் கடுமையாக உழைப்பவன், இலக்கை எட்ட ஓயாமல் உழைப்பவர் என்றெல்லாம் பொருள் ஆகும்.

அதற்கேற்ற வகையில் தான் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நீங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் மூத்த பாட்டாளி நான். நானும் இலக்கை அடைவதற்காக மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த 5 நாட்களில் 4 மாவட்டங்களின் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். மருத்துவர் அய்யா இந்த வயதில் ஆலோசனைக் கூட்டங்களுக்காக அலையவும், கடுமையாக உழைக்கவும் வேண்டுமா? என்று கூட நமது நிர்வாகிகள் கேட்டனர். அவர்களிடம் அத்தகைய கேள்விக்கே இடமில்லை என்று கூறிவிட்டேன். பாட்டாளிகள் என்றால் அனைவரும் பாட்டாளிகள்தான். நான் மூத்தவனாக இருந்தாலும் நானும் பாட்டாளிதான். எல்லா பாட்டாளிகளும் உழைக்கும் போது நானும் உழைப்பேன் என்று கூறிவிட்டேன். நான் ஓயமாட்டேன்.

பாட்டாளிகளாகிய நாம் உன்னதமான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தில் நாம் நொடிப்பொழுதும் சுணங்கிவிடக் கூடாது. மக்களை சந்திப்பது, அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு தொண்டர்களை தயார்படுத்துவது உள்ளிட்ட பணிகளை காலை 9.00 மணிக்கு தொடங்கினால் மாலை 5.00 மணி வரைக்கும் அலுவலக பணிகளை மேற்கொள்வது போன்று பா.ம.க. நிர்வாகிகள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு உழைத்தால்தான் நாம் உயர்வடைய முடியும். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்றிய செயலாளர்களுடன் இணைந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டேன்.

அனைத்து ஒன்றியங்களிலும் இரு சக்கர ஊர்தி பேரணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த இரு விஷயங்களிலும் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய நான் விரும்புகிறேன். மாவட்ட செயலாளர்கள் எத்தனை கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். எத்தனை ஒன்றியங்களில் இருசக்கர ஊர்திப் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு தெரிவிப்பவர்களின் ஒன்றியங்களில் பேரணியை தொடங்கி வைக்க நான் தேதி தருகிறேன். அனைவரும் இணைந்து உழைப்போம்... உயர்வோம்.” என்று மடலில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.