Asianet News TamilAsianet News Tamil

ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிக்கும் திமுக அரசு..? இதெல்லாம் நிறைவேறாத கனவு.. போட்டு பொளந்த ராமதாஸ்..

வனப்பரப்பை பெருக்க களப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss statement - Tamil Nadu Forest department issue
Author
Tamilnádu, First Published Apr 27, 2022, 1:29 PM IST

இதுகுறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வனப்பரப்பை அடுத்த பத்தாண்டுகளில் 33% ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கு அடிப்படைத் தேவையான வனத்துறை களப்பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் தமிழக வனத்துறை இதுவரை மேற்கொள்ளாதது தான் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

இன்றைய நிலையில், இந்தியாவின் வனப்பரப்பில் தமிழகத்தின் பங்கு வெறும் 3% மட்டும் தான். அதேபோல், தேசிய வனக் கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 33% வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் வனப்பரப்பு அதன் நிலப்பரப்பில் 23.71% ஆக உள்ளது. ஆக, எந்த வகையில் பார்த்தாலும் தமிழக வனப்பரப்பு, இப்போது இருப்பதில் மூன்றில் ஒரு பங்குக்கும் கூடுதலாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.

2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை தமிழகத்தின் வனப்பரப்பு 0.06% மட்டுமே அதிகரித்திருக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளத்தின் வனப்பரப்பு 2.68%, ஆந்திரத்தின் வனப்பரப்பு 1.31% அளவுக்கு இதே காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் குறைவு.
தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக அதிகரிக்கும் நோக்குடன் ஆண்டுக்கு சராசரியாக 32 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. 

முந்தைய ஆட்சியிலும் கிட்டத்தட்ட இதே அளவு மரங்களை தமிழக அரசு நட்டாலும் கூட, வனப்பரப்பு அதிகரிக்கவில்லை. அதற்கான காரணங்களில் முதன்மையானது வனத்துறையில் களப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததும், கள அளவில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாததும் தான். இதை உணர்ந்து கொள்ளாமல் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிப்பதென்பது நிறைவேறாத கனவாகவே நீடிக்கும்.

தமிழகத்தில் 2005-ஆம் ஆண்டில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் பணியிடம் ஒன்று தான் இருந்தது. ஆனால், இப்போது அது நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 2005-ஆம் ஆண்டில் 12 ஆக இருந்த தலைமை நிர்வாக பணியிடங்கள் இப்போது 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், களத்தில் நேரடியாக பணியாற்றும் வனச்சரக அலுவலர் பணிகள் 626-லிருந்து 542 ஆக குறைக்கப்பட்டுள்ளன. களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இல்லாமல், கட்டளையிடும் அதிகாரிகளை மட்டும் கொண்டு இலக்கை எப்படி எட்ட முடியும்?

மக்களைக் கொண்டு மரம் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான சமூகக் காடுகள் கோட்டங்களை மூட வனத்துறை ஆணையிட்டுள்ளது. சேலம் சமூகக் காடுகள் கோட்டம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மூடப்பட்டு விட்ட நிலையில், கடந்த 52 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருச்சி வனப் பொறியியல் கோட்டத்தையும், சரகங்களையும் மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வளவு குறைகளை வைத்துக்கொண்டு தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்க நினைப்பது ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு ஒப்பானதாகும்.

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் எண்ணம் அரசுக்கு உண்மையாகவே இருந்தால், வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட களப் பணியாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்கான பதவி உயர்வையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும். சமூகக் காடுகள் கோட்டங்கள், வனப்பொறியியல் கோட்டம் ஆகியவற்றை மூடும் முடிவை கைவிட வேண்டும். மாறாக, புதிய வருவாய் மாவட்டங்களில் வனத்துறை அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்கவும் அரசு முன்வர வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios