தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும்,நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு அரசு ஆனையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில்,மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும்,நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆனையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுக்கடைகள் அத்தியாவசியம் இல்லை.ஆனால்,கட்டுப்பாடுகள் இன்றி அவை செயல்படுகின்றன.அவை உடனடியாக மூடப்பட வேண்டும். மது குடிப்பகங்கள் தான் கொரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன. ஆனாலும் அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை குடிப்பகங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆனையிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
