அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததால் அதிருப்தியடைந்த சிலர் பாமகவிலிருந்து விலகி வருகின்றனர். 

வரும் மக்களவை தேதலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக கடந்த தேர்தலை விட இப்போது பலம் வாய்ந்ததாக மாறியிருப்பதாக கருதப்படுவதால் பாமக, அதிமுக அணியில் இணைந்திருப்பது மற்ற கட்சிகளை அதிர வைத்துள்ளது.

 

இதனால் பாமகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாமக கட்சிக்கு உள்ளிருந்தே எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. இதனைத் தொடர்ந்து பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாமக மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த மார்ச் 8, 2017 முதல் பதவி வகித்து வருகிறேன். பாமக அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். எனது விலகல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். 

ராஜேஸ்வரி பிரியாவைப் போல மேலும் சில முக்கிய பாமக பிரமுகர்களும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களும் கட்சியை விட்டு விலகலாம் எனக்கூறப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பி வருகிறது.