கூட்டணி வழியே கிடைக்கும் பதவிகள் பிச்சை என்றால், 2006-ல், திமுகவுக்கு கிடைத்த நாற்காலி, பாமக போட்ட பிச்சை. ஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவி பாமக, போட்ட பிச்சை. என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
 “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சில கட்சிகள் ஜாதி உணர்வை துாண்டி விட்டதால்தான் திமுக தோல்வி அடைந்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், அறம் சார்ந்த அரசியல் செய்ய முன்வரும்படி பாமக நிறுவனர் ராமதாஸ் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். அதை மு.க. ஸ்டாலின் விரும்பினால் ஏற்கலாம்; விரும்பாவிட்டால் கடந்து போயிருக்கலாம்.
ஆனால், ‘முரசொலி’யில், அறம் குறித்து அவரது தந்தை ‘பராசக்தி’ திரைப்படத்தின் நீதிமன்ற காட்சிக்கு வசனம் எழுதியிருக்கிறார்' என மு.க.. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுடனும் திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணி மாற்றம் நடப்பது வழக்கம். இது மு.க. ஸ்டாலினுக்கு தெரியவில்லை.


திமுகவின் கூட்டணி தாவல்களை பட்டியலிட அறிக்கை பத்தாது; அதை தொடர்கதை போல்தான் எழுத வேண்டும். கூட்டணி வழியே கிடைக்கும் பதவிகள் பிச்சை என்றால், 2006-ல், திமுகவுக்கு கிடைத்த நாற்காலி, பாமக போட்ட பிச்சை. ஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவி பாமக, போட்ட பிச்சை. ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். தமிழக அரசியலில், எந்த மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழும். மு.க. ஸ்டாலினுக்கு மட்டும் அரசியல் அறமும் நாகரிகமும் வரவே வராது; அவர் திருந்தவும் மாட்டார்” என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.