Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கு நீங்க ஒண்ணும் பாடம் எடுக்க வேண்டாம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது பாயும் ஜி.கே.மணி..!

 சமூக நீதி என்பது சிதம்பரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போது பெயருக்குப் பின்னால் படையாட்சி பட்டத்தை போட்டுக் கொள்வது, தேர்தல் முடிவடைந்தவுடன் வன்னியர்கள் சாதிவெறியர்கள் என்று கூறுவது என்பதைப் போன்றது அல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் போராடிப் பெற்ற உரிமையாகும்.

pmk GK Mani slame Marxist Communist
Author
Tamil Nadu, First Published Jul 22, 2020, 3:14 PM IST

ஓ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என காட்டமாக பாமக தலைவர் ஜி.மணி கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி தமிழகத்தின் பிற கட்சிகள் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், ஆனால், பா.ம.க. 27% இட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்திருப்பதால் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அவரது அறியாமை கவலை அளிக்கிறது.

pmk GK Mani slame Marxist Communist

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மீது குற்றஞ்சாட்டும் முன்பு அது குறித்த அடிப்படைக் கூறுகளை கே.பாலகிருஷ்ணன் அறிந்து கொண்டிருக்க வேண்டும். சமூக நீதி என்பது சிதம்பரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போது பெயருக்குப் பின்னால் படையாட்சி பட்டத்தை போட்டுக் கொள்வது, தேர்தல் முடிவடைந்தவுடன் வன்னியர்கள் சாதிவெறியர்கள் என்று கூறுவது என்பதைப் போன்றது அல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் போராடிப் பெற்ற உரிமையாகும்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்திலிருந்து வழங்கப்படும் இடங்களுக்கு தமிழகத்தில் வழங்கப் படுவது போன்று 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வழக்குத் தொடர்ந்து விட்டால் உடனடியாக 50% இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி விடுமா? எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தான் தீர்மானிக்கப்படுமே தவிர, பாலகிருஷ்ணன் போன்றவர்கள் வெளியிடும் அறிக்கைகள் அடிப்படையிலோ, அவரது முதலாளிகள் தாக்கல் செய்த அபத்தமான வழக்கு மனுக்களின் அடிப்படையிலோ அல்ல. இந்த அடிப்படையை பாலகிருஷ்ணனும், அவரை இயக்கும் சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அகில இந்திய தொகுப்பு என்பது உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அகில இந்திய  தொகுப்பை நிர்வகிப்பதும், அதற்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதும் மத்திய அரசு தான். அவ்வாறு இருக்கும் போது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி தான் எந்தப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தின்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 27% தான் இட ஒதுக்கீடு  வழங்க முடியும். இது சமூகநீதி பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.

pmk GK Mani slame Marxist Communist

அபய்நாத் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தானே தவிர, மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி அல்ல என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அவரது அறிக்கையையே மீண்டும் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளலாம்.  இந்த உண்மைகளும், அரசியலமைப்பு சட்ட விதிகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாக தெரிந்ததால் தான் சாத்தியமாகும் தீர்ப்பைப் பெறுவதற்காக 27% இட ஒதுக்கீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.

மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியலமைப்புச் சட்டம் குறித்தோ, அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தோ எதையும் தெரிந்து கொள்ளாமல், தங்களின் முதலாளிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில், அவர்கள் தாக்கல் செய்த வழக்கு மனுவின் நகலை வாங்கி, பெயரை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு தாக்கல் செய்ததால் தான் அபத்தமான வாதங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.
 
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதியின் படி அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையினை செயல்படுத்த வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதனால் தமிழகம் வழங்கிய இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார். அவரது அறியாமை நகைப்பை ஏற்படுத்த வில்லை; மாறாக வேதனையைத் தருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து தமிழக அரசால் நிரப்பப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களாக இருந்தாலும் கூட, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட பிறகு அந்த இடங்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசு விதிகளின்படி தான் தீர்மானிக்கப்படுமே தவிர, மாநில அரசு விதிகளின்படி அல்ல என்பதை பாலகிருஷ்ணன் உணர வேண்டும்; முதலாளிகளுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

pmk GK Mani slame Marxist Communist

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் புதிய காவலனைப் போன்று அரிதாரம் பூசிக்கொண்டு வந்து நிற்கும் பாலகிருஷ்ணன் போன்றவர்களுக்கு சமூகநீதி பற்றி பேசுவதற்கும், பா.ம.க.வின் நிலைப்பாட்டை விமர்சிப்பதற்கும் என்ன தகுதி இருக்கிறது? அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதைக் கண்டித்து கடந்த 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. அப்போதெல்லாம் பாலகிருஷ்ணனும், அவரது முதலாளிகளும் யாருடைய நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களால் விளக்க முடியுமா?

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப் படுவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி  இராமதாஸ் தொடர்ந்து கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தில் தான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கு காரணமாகத் தான் இடஒதுக்கீடு  வழங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தான் அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்; 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். 27% இட ஒதுக்கீடு குறித்து தமிழகத்திலிருந்து தொடரப்பட்ட முதல் வழக்கு அதுதான் என்பது பாலகிருஷ்ணனுக்கு தெரியுமா?

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்திருந்த வழக்கு திட்டமிட்டபடி நடந்திருந்தால், இந்நேரம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அதே வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளிக் கட்சி அதை இணைத்துக் கொண்டு, 50% ஒதுக்கீடு கோரி குறுக்குசால் ஓட்டியதால் தான் நீதிபதிகள் ஆத்திரமடைந்து அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றினார்கள். அதைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் உள்ளது? என்பது குறித்த சர்ச்சையில் உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் இடையே சமூகநீதி பந்தாடப்பட்டது. அதற்கு காரணமான முதலாளிக் கட்சியை தோழர் கண்டிப்பாரா?

pmk GK Mani slame Marxist Communist

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, அதன் முதலாளி கட்சியோ துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் இந்த இடஒதுக்கீட்டை போராடிப் பெற்றுத் தந்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தம்மையும் இணைத்துக் கொண்டு வாதாடி 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த ஒரே  கட்சி இந்தியாவிலேயே பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது பாலகிருஷ்ணனுக்கு தெரியுமா?

அபய்நாத் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறியிருக்கும் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு,  அத்தீர்ப்பு வழங்கப்பட காரணமே, பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக அப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆணைப்படி தாக்கல் செய்யப்பட்ட மனு தான்  என்பதும் தெரிந்திருக்கும். ஆனால், அதை  சுட்டிக்காட்டுவதற்கு கூட முடியாத அளவுக்கு தோழர் அவர்களின் மனதில் வன்மம் வளர்ந்து கிடக்கிறது.

 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவானவர்களைப் போன்று வேடமிடும் கே.பாலகிருஷ்ணனுக்கு உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

* அகில இந்திய தொகுப்பு உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, மத்திய அரசு நினைத்தால், உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம். பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் கொண்டு வரப்பட்ட பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு 2010-11 ஆம் ஆண்டில் தான் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. அப்போது மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இல்லை. இருந்திருந்தால், பட்டியலினம், பழங்குடியினருக்கு வழங்கியது போன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார். ஆனால், அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளி கட்சியும், காங்கிரசும் இணைந்து தான் மத்தியில் ஆட்சி செய்தன. இன்னும் கேட்டால் முதலாளி கட்சியைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராகவும் இருந்தார். அவர்கள் நினைத்திருந்தால் அப்போதே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். அதை அவர்கள் செய்யாதது ஏன்? என்று கேட்டு கே.பாலகிருஷ்ணன் கண்டிப்பாரா?

pmk GK Mani slame Marxist Communist

*  மார்க்சிஸ்ட் கட்சியின் முதலாளி கட்சியும், காங்கிரசும் இணைந்து தான் மத்தியில் ஆட்சி செய்த 2011-ஆம் ஆண்டில் தான் நீட் தேர்வை திணித்தது. அதற்கான கோப்பு முதலாளி கட்சியை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சரை கடந்து தான் சென்றிருக்க வேண்டும். இப்போது நீட் தேர்வை எதிர்க்கும் பாலகிருஷ்ணன் அதற்கு காரணமான முதலாளி கட்சியை கண்டிக்க முன்வருவாரா?

*  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதால் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தேசிய அளவில் போராட மார்க்சிஸ்ட் கட்சி தயாரா?

*  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மாநில அளவில் மட்டுமல்ல.... தேசிய அளவிலும் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. அதற்கான ஒரே தீர்வு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் முதலாளிகளின் நிலைப்பாடு என்ன? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?

pmk GK Mani slame Marxist Communist

நிறைவாக தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஓர் அறிவுரை...சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாடம் நடத்த முயற்சி செய்ய வேண்டாம். இதில் உங்களுக்கு  ஏதேனும் ஐயம் இருந்தால், 2006-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி டெல்லியில் சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரித் தலைவர்கள்  கூட்டத்தில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எப்படி போராடி சாதித்தார்? என்பதை அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த தோழர்கள் சீதாராம் யெச்சூரி, து.இராசா ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சமூகநீதி பற்றி உங்களுக்கு வழிகாட்ட அவர்கள் தான் தகுதியானவர்கள்.... இங்குள்ள முதலாளிகள் அல்ல என்று கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios