Asianet News TamilAsianet News Tamil

தலித் அல்லாத மக்களை பழிவாங்க துணைபோவதா..? அவசர சட்டம் இயற்ற கூடாது!! ராமதாஸ் வலியுறுத்தல்

pmk founder ramadoss opinion about supreme court verdict on sc st act
pmk founder ramadoss opinion about supreme court verdict on sc st act
Author
First Published Apr 21, 2018, 1:50 PM IST


வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பால் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு வழங்கப்படு வரும் உரிமை பறிக்கப்படாது; எனவே அத்தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தனிமனித சுதந்திரம் எந்த வகையிலும் பறிக்கப்படக் கூடாது; அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்ற உன்னத நோக்கத்துடன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் சில திருத்தங்களைச் செய்து உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை சீராய்வு செய்ய மத்திய அரசு கோரியிருப்பது கண்டிக்கத்தக்கது.

வன்கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி அளித்தத் தீர்ப்பு எந்த வகையிலும் விமர்சிக்க முடியாத ஒன்றாகும். பணியிடங்களில் தவறு செய்யும் பணியாளர்களை கண்டித்தால் அவர்கள் தங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்து பழிவாங்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி சில அரசு ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்கொடுமைச் சட்டம் கடந்த 30 ஆண்டுகளாக அப்பாவி மக்களையும், அரசு ஊழியர்களையும் மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

“வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சாதியக் கோடுகளை அழிப்பதற்காகத் தான். ஆனால், அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் சாதி வெறுப்பை ஊக்குவிக்கும் வகையிலான பொய் புகார்களை பதிவு செய்வதற்காகவே தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சட்டம் சாதியை ஒழிப்பதற்கு பதிலாக சாதியத்தை நிலை நிறுத்திவிடும். ஒரு சட்டம் அப்பாவிகளை சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக்கூடாது” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, முதல்கட்ட விசாரணை நடத்திய பிறகே வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் தவறில்லை. இது பட்டியலின மக்களின் உரிமையை பறிக்காது.

பட்டியலின, பழங்குடியின மக்கள் மற்றவர்களால் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் 30 ஆண்டுகளுக்கு முன் 1989-ம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இச்சட்டம் தவறானவர்களின் கைகளில் சிக்கி அப்பாவி மக்களை பழிவாங்கும் கருவியாக மாறி விட்டது. அதனால் தான் இச்சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, ”இந்த சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளிவரும் வகையில் திருத்தம் செய்யப்படவேண்டும். இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார் மனுக்கள் அனைத்தையும் இக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என எனது தலைமையில் நடந்த அனைத்து சமுதாயப் பேரியக்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மஹராஷ்டிராவில் 2016-ம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரை மொத்தம் 57 இடங்களில் மராத்தா மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். வன்கொடுமை தடுப்புச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் உள்ளது; அதற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு உள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

பட்டியலின மக்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று எவரும் விரும்பவில்லை. மாறாக, அவர்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் பிறரை பழிவாங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது. உச்சநீதிமன்றமும் இதே கருத்தையே கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் பட்டியலின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி இதுவரை வழங்கப்பட்டு வரும் எந்த சலுகையும், உரிமையும் பறிக்கப்படாது. ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கட்சிகளும், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கட்சிகளும் நடத்தியப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது தேசிய அளவில் தலித் அல்லாத 77.5% மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81% மக்களும் பழிவாங்கப்படுவதற்கு துணைபோகும் செயலாகும். இதற்கு காரணமான சக்திகளை இந்த சட்டத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடர்வதற்கு முன்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக முடிவெடுத்துவிடவில்லை. மாறாக, மத்திய அரசு தாக்கல் செய்த புள்ளி விவரங்கள், முன்வைத்தக் கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

2015-ம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி மொத்தம் 45,039 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 15-16% வழக்குகள் விசாரணை நிலையிலேயே மூடப்பட்டன; 75% வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்; மற்றவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மிகவும் தவறாக பயன்படுத்தப்படுவது உண்மை தான் என்றும் ஒப்புக்கொண்டது. ஆனால், இப்போது சில கட்சிகள் போராடுவதைக் காரணம் காட்டி, மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றுவது சரியல்ல.

அதேபோல், இந்த வழக்கு விசாரணையின் போது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அவர் முன்பிணை பெறுவதற்கு அச்சட்டத்தின் 18-வது பிரிவு தான் தடையாக இருப்பதாகவும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணீந்தர்சிங் வாதிட்டார்.

ஆனால், இப்போது அதே மத்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கப்பட்டால் அவர்கள் சாட்சிகளை கலைத்து விடுவர் என்று கூடுவது சட்டத்தையும், நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது தான் உண்மை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்வதில் தாமதமானால், அதேசட்டத்தின்படி இழப்பீடு கிடைக்கவும் தாமதமாகும் என்பது தான் மத்திய அரசும், மற்றவர்களும் கூறும் காரணமாகும்.

ஆனால், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் முன்பிணை கோரினாலும், அவர்கள் மீதான புகாருக்கு ஆதாரங்கள் இருந்தால் முன்பிணை வழங்கப்படாது, அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்பதால் இதுகுறித்த தீர்ப்பால் தலித்துகளுக்கு பாதிப்புகள் இல்லை.

நிறைவாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதை ஆதரிக்கின்றனவா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதேநேரத்தில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக மாற்றும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios