Asianet News TamilAsianet News Tamil

ஓபிசி பிரிவினருக்கு உங்களால்தான் நீதியை பெற்று தர முடியும்... பிரதமர் மோடிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்!!

35 ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் உரிமைகளை இழந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது. அதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

PMK founder Ramadoss letter to PM Modi
Author
Chennai, First Published Jul 28, 2020, 9:11 PM IST

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக இழைக்கப்பட்டு வரும் அநீதியை களைவதற்கு தங்களின் நடவடிக்கையை எதிர்பார்த்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தியாவின் பிரதமராகிய தாங்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். உங்களால் அவர்களுக்கு நீதி பெற்றுத் தர முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

PMK founder Ramadoss letter to PM Modi
பாமக சமூகநீதிக்காக பாடுபடும் கட்சி என்பதை தாங்கள் அறிவீர்கள். மாநில அளவிலும், தேசிய அளவிலும் சமூகநீதியைக் காப்பதற்காக பாமக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி பல முறை கடிதம் எழுதியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணியும் வேறு பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், “அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்க தமிழ்நாடு அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்” என்று ஆணையிட்டுள்ளது.

PMK founder Ramadoss letter to PM Modi
மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் - 2006 நிறைவேற்றப்பட்ட பிறகு 2010&11ம் ஆண்டு முதல் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம்தான், அகில இந்திய தொகுப்புக்கான இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் போது அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27% இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு விரும்புகிறேன்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்களும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்தான் எனும் போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்கும். மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

PMK founder Ramadoss letter to PM Modi
அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்ட நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11,000 மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். 35 ஆண்டுகளாக உரிமைகளை இழந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது. அதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு வசதியாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவக் குழுவின் செயலாளர், இந்திய பல் மருத்துவக் குழுவின் செயலாளர்கள் கூட்டத்தை சுகாதார சேவைகளுக்கான தலைமைச் செயலாளர் மூலம் நடத்தி, உரிய முடிவுகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று கடிதத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios