தமிழக அரசுக்கு வேறு வருவாய் ஆதாரங்களே இல்லாத நிலையில், மத்திய அரசு உதவியாக வேண்டும். அது மத்திய அரசின் கடமையும், பொறுப்பும்கூட. கொரோனா ஒழிப்பு பணிக்காக தமிழக அரசு கோரிய ரூ.18,321 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக ஒரு முழு மாதம் (ஏப்ரல்) நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கொரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடமிருந்து தமிழகம் கோரிய நிதியை விரைந்து பெற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
2020-21ம் நிதியாண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் இலக்கு ரூ.1,33,530.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்கு சராசரியாக ரூ.11,127.30 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதில் வெறும் 10 சதவீதம் மட்டுமே வருவாயாக கிடைத்திருப்பதாகவும், அதிகபட்சமாகமாக 20 சதவீதமாக இருக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நிதியாண்டின் முதல் மாதத்தில் 90 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தின் நிதி ஆதாரங்கள் மீது கொரோனா வைரஸ் எத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கிறது என்பதை அறியலாம்.
மற்றொருபுறம் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நோய்ப்பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மற்றொரு புறம் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் தமிழக அரசின் சார்பில் ரூ.3,280 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களும், அமைப்பு சாராத தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம் நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தக்கட்ட வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் பெருமளவில் நிதி தேவை.


கொரோனா ஒழிப்புப் பணிகள் மற்றும் வாழ்வார உதவிகளை வழங்குவதற்காக முதலில் ரூ.16,000 கோடி நிதி உதவி கோரியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தக்கட்டமாக, உணவு தானியங்கள் வாங்குவதற்காக ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக தேசியப் பேரிடர் நடவடிக்கை நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்கும்படி மைய அரசை கோரியிருந்தார். ஆனால், இந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை. வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.6,420 கோடியை மத்திய அரசு வழங்கிய போதிலும், தமிழக அரசு கோரிய நிதி கிடைக்கவில்லை.
நிலைமையைச் சமாளிப்பதற்காக தமிழக அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.8,000 கோடிக்கு பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. நடப்பாண்டில் தமிழக அரசு நிர்ணயித்த சொந்த வரி வருவாய் இலக்குகளில் பாதியைக் கூட எட்ட முடியுமா? என்பது ஐயமாகவே உள்ளது. மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய அனைத்து நிதியுதவிகளும் கிடைத்தாலும் கூட, கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக கடன் வாங்க வேண்டியிருக்கும். தமிழக அரசுக்கு வேறு வருவாய் ஆதாரங்களே இல்லாத நிலையில், மத்திய அரசுதான் உதவியாக வேண்டும். அது மத்திய அரசின் கடமையும், பொறுப்பும் கூட. எனவே, கொரோனா ஒழிப்பு பணிக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.18,321 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.” அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.