விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... பாமகவுக்கு அக்னிப் பரீட்சை..? அதிமுக வெற்றிக்காக உக்கிரம் காட்டும் பாமக!
விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக வெல்வதன் மூலம் பாமகவுக்கும் அது பலம் சேர்க்கும். வன்னியர் பகுதியில் பாமக செல்வாக்கோடு இருப்பதையும் நிரூபிக்கவும் முடியும். அது 2021 பொது தேர்தலுக்கு பெரிய அளவில் உதவும் என்பதால், அதிமுக வெற்றியைப் பார்க்க பாமகவும் ஆவலோடு காத்திருக்கிறது.
அதிமுகவை போலவே அதன் கூட்டணி கட்சியான பாமகவும் இடைத்தேர்தலில் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கும் நிலையில் உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே பாமகவின் செல்வாக்கும் கூடும்.
இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளில் விக்கிரவாண்டி வட மாவட்டத்தில் வருகிறது. ‘வன்னியர்கள் பெல்ட்’ என்று அழைக்கப்படும் பகுதியில் இடைத்தேர்தல் வருவதால், பாமகவின் மீதும் அரசியல் பார்வை பதிந்துள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வெல்வதன் மூலமே வன்னியர் சமுதாயம் தங்கள் பின்னாள் உள்ளது என்பதையும் எதிர்கால சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொள்ளவும் பாமகவால் முடியும்.
ஏனென்றால், இந்தத் தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வாங்கிய ஓட்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனித்து போட்டியிட்ட பாமக, இந்தத் தொகுதியில் 40 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றது. திமுக 6 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று அதிமுகவை வீழ்த்தியது. தற்போது அதிமுகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், அதிமுகவின் வெற்றி சுலபமாக இருக்கும் என்று அதிமுகவினர் பேசிவருகிறார்கள்.
ஏப்ரலில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வென்ற 9 தொகுதிகளில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சோளிங்கர் ஆகிய தொகுதிகள் ‘வன்னியர் பெல்ட்’ பகுதியிலிருந்து கிடைத்தவை. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று பாமக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்ச்சியாக உத்தரவுகளை வழங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைவர்கள் வழிகாட்டி வருகிறார்கள். அதிமுகவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் இது முக்கியமான தேர்தல். கடந்த 8 ஆண்டுகளாக பாமக பெரிய வெற்றியை ருசிக்கவில்லை. 2016-ல் விக்கிரவாண்டி தொகுதியில் 23 சதவீத வாக்குகளை பாமக பெற்றது. இப்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் வெற்றி சுலபமாக கிட்டும்” என்று அந்த நிர்வாகி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக வெல்வதன் மூலம் பாமகவுக்கும் அது பலம் சேர்க்கும். வன்னியர் பகுதியில் பாமக செல்வாக்கோடு இருப்பதையும் நிரூபிக்கவும் முடியும். அது 2021 பொது தேர்தலுக்கு பெரிய அளவில் உதவும் என்பதால், அதிமுக வெற்றியைப் பார்க்க பாமகவும் ஆவலோடு காத்திருக்கிறது. அதிமுகவுக்கு உதவுவதற்காக விக்கிரவாண்டியில் பாமக சார்பிலும் தேர்தல் பணிக்குழு அமைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமகவின் எதிர்பார்ப்பு குறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக எங்களுடன்தான் இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை. பாமக வாக்கு எங்களுக்கு உதவவில்லை. அதிமுக கூட்டணியில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர். அந்தந்த நேரத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைதான் வெற்றியைத் தீர்மானிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் பாமகவைவிட அதிக வாக்குகளை விசிக பெற்றிருந்தது. 22 இடைத்தேர்தலில் திமுக 13-ல் வெற்றி பெற்றது. வன்னியர்கள் நிறைந்துள்ள வேலூரில் தனியாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்றோம். விக்கிரவாண்டியிலும் நாங்களே வெற்றி பெறுவோம்” என்று அந்த நிர்வாகி தெரிவித்தார்.