தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக இணைந்து போட்டியிடும் நிலையில் புதுச்சேரியில் இக்கூட்டணியிலிருந்து பாமக விலகியுள்ளது.  

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இதேபோல புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்ப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 14 தொகுதிகளை பாஜகவும் அதிமுகவும் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.
எனவே, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் மட்டுமே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாமக, புதுச்சேரி தேஜகூவிலிருந்து விலகியுள்ளது. புதுச்சேரியில் பாமக 12 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் காரைக்காலில் 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பாமக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.