மகளிர், மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3,000- பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு என்ன.?
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுகிறது. இந்தநிலையில் பாமகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் என்னவென தற்போது பார்க்கலாம்..
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் பாமகவும் தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்...
சமூக நீதி
- 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.
- வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு
- மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.
- ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50%&ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைச் சட்டம்
- வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும். அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. வலியுறுத்தும்.
- 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை
- மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு மானியம் ரூ.6,000&லிருந்து ஏக்கருக்கு ரூ.10,000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும்.
- வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி.
- நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம்
- தொழில் திட்டங்களுக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.
- கடலூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.
- என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் மற்றும் முதல், 2ஆம் சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு தடை.
அணுஉலை இல்லா தமிழகம்
- தமிழ்நாட்டை அணுஉலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கால அட்டவணை வெளியிடப்படும்.
- காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
நதிகள் இணைப்புத் திட்டம்
- புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டின் நலனுக்காகக் கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.
மேகதாது அணைக்குத் தடை
- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டக் கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்.
- பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரியின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசின் மூலமாக பா.ம.க. தடுத்து நிறுத்தும்.
தமிழ்நாட்டில் 3 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
- இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 30 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளில் 20 இலட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டுத் தொழிற்பயிற்சி வழங்கப்படும். 10 மாதப் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
மகளிருக்கு மாதம் ரூ.3,000
- இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
- மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.
- விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 8ஆவது ஊதியக்குழு
- அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பாமக வலியுறுத்தும்.
- சமவேலைக்குச் சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய & மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.
இதையும் படியுங்கள்