திமுகவுக்கு வாலும், அதிமுகவுக்கு தலையும் காட்டிவந்த பா.ம.க ஒரு வழியாக பேரம் படிந்து அதிமுக- பாஜக கூட்டணியில் சங்கமம் ஆகிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளரான வன்னி அரசு விமர்சித்துள்ளார். 

அதிமுக- பாமக குறித்து விமர்சித்துள்ள அவர், ‘’பாமகவுக்கு இயற்கையான கூட்டணி பாஜக தான். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மதவாதத்துக்கு அடிப்படையே சாதியம் தான். அந்த சாதியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான் பாமக. கொள்கை - கோட்பாடு - நம்பகத்தன்மை இப்படி எந்த ஒன்றும் தேவையில்லை, வாக்குகள் மட்டுமே ஒற்றைக் குறிக்கோள் என்று தேர்தலுக்குத் தேர்தல் பச்சோந்தியாய் தாவும் ஒரு கட்சி இருக்கிறதென்றால், அது பாமகதான். 

டாக்டர் ராமதாஸ் கடந்த காலங்களில் ‘சத்தியம்’ செய்து சொன்னவற்றை எல்லாம் ஏட்டில் எழுதிடவும் முடியாது. ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேள்வியும் கேட்கமுடியாது.  “தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சியின் பதவிக்கு வரமாட்டார்கள். சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் எனது குடும்பத்தினர்கள் கால் வைக்கமாட்டார்கள். எனது கட்சி உறுப்பினர்கள் ஊழல் செய்தால் நடுரோட்டில் சவுக்கால் அடியுங்கள்; இது சத்தியம், சத்தியம்” என்று மேடை மேடையாக பேசி எல்லோரையும் ஏமாற்றினார். அப்படி சொன்னவற்றை அவரே மீறியதற்காக அவர் ஒருபோதும் வெட்கப்பட்டதும் இல்லை. வருத்தம் தெரிவித்ததும் இல்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் நம்பிய மக்களையும் கட்சிகளையும் ஏமாற்றுவதையே ஒரு தொழிலாக கொண்டிருப்பவர் ராமதாஸ்.

1991ஆம் ஆண்டில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார் ராமதாஸ். 199 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரே இடத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவுடனயே பண்ருட்டி ராமச்சந்திரன், “ராமதாஸ் ஒரு ஏமாற்றுப் பேர்வழி” என்று குற்றம் சுமத்திவிட்டு வெளியேறினார். பின்னர், ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ என்ற அமைப்பை துவங்கினார்.

1996ஆம் ஆண்டிலிருந்தே தொகுதிப் பேரங்களுக்கான ‘தொழிலை’ ராமதாஸ் ஆரம்பித்தார். திமுக கூட்டணியில் த.மா.க., ஆர்.எம்.வீரப்பன் அணி, இந்திய தேசிய லீக், மக்கள் நல உரிமைக் கழகம் ஆகிய கட்சிகளோடு பாமகவும் இடம் பெறும் என்று ராமதாஸ் அறிவித்து தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். ஆனால், தனது ‘பிளாக்மெயில்’ அங்கு எடுபடவில்லை.


உடனே மதிமுகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவங்கினார் ராமதாஸ். அங்கு இரண்டு பிரச்னைகள் உருவானது. முதலில் வழக்கமான தொகுதிகள் பங்கீடு, அடுத்த பிரச்னை. மதிமுக கூட்டணி என்பதை மாற்றி ‘மதிமுக - பாமக கூட்டணி’ என்று அறிவிக்கவேண்டும் என்று ராமதாஸ் மிரட்ட ஆரம்பித்தார். அதுவும் அங்கு எடுபடவில்லை. 116 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட்டது. நான்கே தொகுதிகளில் குறைந்தபட்ச வாக்குகளில் வெற்றிபெற்றது. அதற்கடுத்த தேர்தல்களில் அதிமுக, திமுக என்று மாறிமாறி வெற்றிபெறுகிற கூட்டணியை தேடிப்போய் இணைத்துக் கொண்டார் ராமதாஸ். பாமக சேருகிற அணி வெற்றிபெறும் என்ற ‘மாயை’யை உருவாக்க முனைந்தார். ஆனால், அது எடுபடவில்லை

2009 ஆம் ஆண்டோடு பாமகவின் கூட்டணி நாடகம் முடிந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாசக, மதிமுக அணி தோல்வியடைந்தது. காங்கிரஸ், திமுக, விடுதலைச்சிறுத்தைகள் அணி வெற்றிபெற்றது. காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் ராமதாஸ் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து, அன்புமணியை அமைச்சராக்கினார். காங்கிரஸ் ஆட்சி முடிந்ததும் 2014ல் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது. திமுகவும் அதிமுகவும் பா.ம.க.வின் சந்தர்ப்பவாதத்தை புரிந்துகொண்டது. வேறு வழியில்லாமல் திணறினார் ராமதாஸ்.

 

ராமதாஸின் பேச்சுக்களும், நடத்தையும் தரம் தாழ்ந்து போயின. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும்  திருமாவளவன் ஆகியோரை மிகக் கேவலமாக, அநாகரீகமாக திட்டினார். அரசியல் தோல்வியால் விரக்தியின் விளிம்பில் நின்று பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். முதல்வராக இருந்த ஜெயலலிதாவை ‘தெருச் சண்டைக்கு’ இழுப்பது போல் இழுத்தார். அதன் விளைவு ராமதாஸ் கைது செய்யப்பட்டார். விடுதலை வேண்டி தமது மனைவியை அனுப்பி மண்டியிட்டார்.

 

விடுதலையானதும் “சிறையிலேயே இறந்திருப்பேன் என்னை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று புலம்பினார். சிறைப்படுத்தியபோது வட தமிழகத்தின் பல இடங்களில் பேருந்துகளை எரித்து கலவரம் செய்தது பாமக. அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில், “வன்முறை செய்த பாமகவிடம் தான் இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்வோம்” என்று அறிவித்தார்.

ராமதாஸ் ஒரு வன்முறையாளர் என்பதை புரிந்துகொண்டு தான் 1992ஆம் ஆண்டு “பாமக ஒரு வன்முறைக் கட்சி என்றும், அக்கட்சியை தடை செய்ய வேண்டும்” என்றும் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதம் குறித்து பின்னாளில் திமுக தலைவர் கருணாநிதியின் கேள்வி-பதில் அறிக்கையில் அம்பலப்படுத்தினார்.

இப்படி சர்தர்ப்பவாதத்தை மட்டுமே மூலதனமாக வைத்து ஒரு கால் நூற்றாண்டு காலத்திற்கு மேல் தமிழக அரசியலையே கேலிக்கூத்தாக்கி வருகிறவர் மருத்துவர் ராமதாஸ். 2014ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே “தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லை” என்று உதார்விட்டனர் தந்தையும் மகனும். “தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை ஒழிக்கவேண்டும். அதற்கான மாற்றுத் திட்டங்களை, நாங்கள் வைத்துள்ளோம். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் சேரமாட்டோம்” என்றார் ராமதாஸ்.

இந்த அறிக்கைவிடுத்த பத்து நாட்களில் மதிமுக, தேமுதிக, பாஜகவுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்தித்தார் ராமதாஸ். 2016ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற மாய்மாலத்தை விளம்பரம் ஆக்கியது பா.ம.க. முதல்வர் வேட்பாளராக கட்டி இறக்கிவிடப்பட்டார் அன்புமணி. பாவம் அவர் திருவிழாவுக்குள் நுழைந்த குழந்தையை போல ஓட ஆரம்பித்தார். ‘நான் முதல்வர் ஆனால்...’ என்று பள்ளிக் குழந்தையின் பேச்சைப் போல மேடை மேடையாக ஒப்புவித்துக் கொண்டிருந்தார்.

 

அப்போதும் அன்புமணி, “நூறு சதவீதமல்ல, நூத்தி ஓர் சதவீதம் திராவிடக் கட்சிகளோடு இனி கூட்டணி இல்லை. கடந்த காலத்தில் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்தற்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று ஊடகங்களிடம் பேட்டியளித்தார்.

தந்தையும் மகனும் நினைத்தவற்றை எல்லாம் ‘சவடால்’ விடுகிற பாணியில் பேசி வந்தனர். ஆனால், இவர்களின் பேச்சை யாருமே பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தருவது ஒதுக்குவது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் மாட்டினார் அன்புமணி. சிபிஐ அன்புமணி மீது வழக்கு பதிவு செய்தது. “அடிப்படை முகாந்திரம் இல்லையென்றும் தன்னை விடுவிக்க வேண்டும்” என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி மன்றாடினார். சி.பி.ஐ. ஆதாரத்தை தாக்கல் செய்தது. நீதிமன்றமே விடமறுத்தது. அப்படி ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அன்புமணி தான் கடந்த டிசம்பர் 9, 2017ஆம் தேதி தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் ஒன்றை ஆளுநர் பன்வரிலால் அவர்களிடம் கொடுத்தார். அதிமுக அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று 15 பக்க அறிக்கையாக கொடுத்தார்.

திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டை சீரழித்துவிட்டது என்றும் இது குறித்து என்னோடு விவாதிக்கத் தயாரா? என்று திராவிடக் கட்சிகளுக்கு அன்புமணி சவால் விட்டார். இப்படி திமுக, அதிமுக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன என்றும் பா.ம.க. மட்டுமே தமிழகத்தை காப்பாற்றப் போகிற கட்சி என்று சவடால் அடித்துக் கொண்டிருந்த பா.ம.க. இப்போது, அதிமுகவிடம் மண்டியிட்டது.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பாமகவை தனிமைப்படுத்தவே முயற்சித்தனர். யாரும் கூட்டணியில் சேர்க்கவே தயங்கினர். நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல என்றும், தமிழக அரசியலில் பெரும் தீங்கான சக்தி என்பதையும் தெரிந்து கொண்டுதான் காய் நகர்த்தினார்கள்.

ஆனால், ‘அம்மாவின் ஆட்சி’ ‘அம்மாவின் ஆட்சி’ என்று வாய்க்கு வாய் பெருமைப்பட்டுக்கொள்கிறது எடப்பாடி-ஓபிஎஸ் அரசு. பாமகவோ, “ஊழல் குற்றச்சாட்டில் தண்டனைப் பெற்ற குற்றவாளியான ஜெயலலிதா படத்தை சட்டப் பேரவையில் திறக்கக் கூடாது” என்று வழக்கு தொடுத்தது. அது மட்டுமல்ல, ‘அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை’ முடக்கவேண்டும், மற்றும் ஜெயலலிதா படங்களை அரசு செலவில் விளம்பரமாக வெளியிடக்கூடாது என்றும் அதிமுகவுக்கு எதிராக தீவிரமாக வழக்கு தொடுத்தது பா.ம.க.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ‘வன்முறை முகம் கொண்ட தீயசக்தி’ என்று அடையாளம் காட்டப்பட்ட ராமதாசை அதிமுக கூட்டணியில் சேர்த்தது ஜெயலலிதா அம்மையாருக்கு செய்யும் துரோகமே!  தமிழக அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்தியான பாமகவை தனிமைப்படுத்துவதே தமிழ்நாட்டுக்கு நல்லது’’ என வன்னி அரசு பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.