PMK Carders Reply to Thangamani for Jayalalithaa did not recognize PMK

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க மோடியை அழைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கூறியதை அடுத்து, பாமக ராமதாஸ், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஊழல் வழக்கில், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, ஆட்டோ சங்கர், சந்தன வீரப்பன் படங்களை கூட வைக்கலாம் என்று நக்கலாக தமது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உலக அளவில் புகழ்பெற்ற தலைவராக விளங்கும் பிரதமர் மோடி, சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பார் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் பாமக என்ற கட்சிக்கு அங்கீகாரம் ஏற்படுத்தி கொடுத்து, அடையாளம் காட்டியது ஜெயலலிதாதான். ஆனால், ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்து வைக்கக்கூடாது என்று ராமதாஸ் நன்றி மறந்து பேசுகிறார் என்றும் கூறினார்.

இதனால் கொதிப்படைந்த பாமக தொண்டர்கள் பலர், வீழ்ந்து கிடந்த அதிமுகவிற்கு உயிர் கொடுத்ததே பாமகதான் என்று கூறியுள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னரே, பாமக தனித்து நின்று, தேவையான வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்று விட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து பாமக தொண்டர்கள் மேலும் கூறியதாவது:-

பாமக தொடங்கப்பட்டு 1989 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், பல தொகுதிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தது. தர்மபுரி தொகுதியில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

முதன் முதலாக தனித்து போட்டியிட்ட அந்த தேர்தலிலேயே, 6 சதவிகித வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பாமக பெற்றுவிட்டது.

அடுத்து, 1991 சட்டமன்ற தேர்தலில், ராஜீவ் படுகொலை அனுதாப அலை வீசிய போதும், தனித்து நின்ற பாமக பண்ருட்டியில் வெற்றி பெற்றது.

1996 ல் ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசி, ஜெயலலிதாவே தோற்ற நிலையிலும் 4 இடங்களில் பாமக தனித்து நின்றே வெற்றி பெற்றது.

அதன் பின்னர், 1998 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ராஜிவ் காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடியார், தமிழகத்தில் அதிமுக, பாஜக, மதிமுக, பாமக ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்கினார்.

கூட்டணியில் பெரிய கட்சி என்ற அந்தஸ்து அதிமுகவிற்கு இருந்தாலும், அன்றைய நிலையில், அதிமுகவுடன் சேர மற்ற கட்சிகள் தயார் நிலையில் இல்லை. ஆனால், அந்த கூட்டணியை ஒருங்கிணைத்தவர் மறைந்த வாழப்பாடியார்தான்.

அந்த தேர்தலில், 30 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. அது பாமக முதன்முதலில் கூட்டணிக்கு ஒத்துக்க கொண்ட தேர்தல். பாமகவை கூட்டணியில் ஒருங்கிணைத்தவர் வாழப்பாடியார்.

அந்த தேர்தல், கடும் வீழ்ச்சியில் சுருண்டு கிடந்த அதிமுகவுக்கு உயிர் கொடுத்த தேர்தல். ஆனால், அப்போது மத்தியில் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு 13 மாதங்களில் கவிழ்வதற்கு காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.

அடுத்து 1999 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு சென்றுவிட்டன. அதனால் அந்த தேர்தலில், ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.

எனவே, தனித்து நின்று 6 சதவிகிதம் வாக்குகளை பெற்று, தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்று சில ஆண்டுகள் கழித்தே, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது.

1996 சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்து வீழ்ந்து கிடந்த அதிமுக, உயிர்த்து எழுவதற்கு, 1998 ல், பாமக கை கொடுத்ததே ஒழிய, ஜெயலலிதா ஒன்றும் பாமகவுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று பாமக தொண்டர்கள் கூறுகின்றனர்.