சூடு பிடிக்கும் தேர்தல் களம்.! வடைகள், பணியாரம் சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்
முதல் கட்ட பிரச்சாரத்தில் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடைகள் சுட்டு நூதன முறையில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரித்தார்.
தீவிரமடையும் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர்கள் முதல் வேட்பாளர்கள் வரை நூதனமுறையில் வாக்குகளை கேட்டு வருகின்றனர். அந்த வகையில், கடையில் புரோட்டா போடுவது. தோசை ஊற்றுவது, துணி துவைப்பது, என வாக்காளர்களை கவர்ந்து வரும் நிலையில், பாமக வேட்பாளர் திலகபாமா வடை சுட்டு வாக்கு சேகரித்தது பொதுமக்கள் வெகுவாக கவர்ந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா இன்று தனது முதல் கட்ட பிரச்சாரத்தை ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.
வடைகள் சுட்டு வாக்கு சேகரிப்பு
மேளதாளங்கள் முழங்க சாலைகளில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் வேட்பாளர் திலகபாமா பணியாரம் மற்றும் வடைகள் சுட்டு அசத்தி நூதன முறையில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்த தொகுதியில் உள்ள அமைச்சர்களோ மற்ற கட்சி நிர்வாகிகளோ இந்த பகுதிக்கு கூட வந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் இந்த பகுதியை தேர்ந்தெடுத்து எனது முதல் கட்ட பிரச்சாரத்தை துவங்குகிறேன் என கூறினார்.
ஐ.பெரியசாமி சிறைபறவையாகிவிடுவார்
பிரச்சாரத்திற்கு ஐ.பெரியசாமியை அழைத்து வருகிறார்கள். அவர் ஜூலை 31ம் தேதி முதல் சிறை பறவையாகி விடுவார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பாராளுமன்ற உறுப்பினரை கூட பிரச்சாரத்திற்கு அழைத்து வர தைரியமில்லை என விமர்சித்தார். இதே போல இரட்டை இலை என்று ஒன்று இருந்தது. அது இப்போது துரோகத்தினால் மண் மூடி கிடக்கின்றது என திலகபாமா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்