வரும் 25ந் தேதி கடலூரில் ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். அங்கு உள்ள சிலையும் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடலூரில் நடைபெற உள்ளதால் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரம் தொகுதி எம்பி என்கிற அடிப்படையில் திருமாவளவன் பெயர் அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்வதில் திருமாவும் உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள்.

ஆனால் ராமசாமி படையாச்சியால் விழாவிற்கு திருமாவின் பெயரை அழைப்பிதழில் போட்டதை பாமக விரும்பவில்லை என்கிறார்கள். இதனால் ராமசாமி படையாச்சியார் விழாவை பாமக நிறுவனர் ராமதாஸ் புறக்கணிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் திருமாவளவனுடன் ஒரே மேடையில் ஏற அன்புமணியும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட அரசு விழாவில் பாமக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை.

இத்தனைக்கும் திருமா திமுக கூட்டணியில் உள்ளார். பாமக அதிமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக நினைத்திருந்தால் திருமா பெயரை புறக்கணித்து விழா அழைப்பிதழை அச்சடித்திருக்க முடியும் என்கிறது பாமக தரப்பு. ஆனால் இந்த விஷயத்தில் ஏதோ ஒரு அரசியல் கணக்கு இருப்பதாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் பாமக கருதுகிறது. அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அதிமுகவின் முதல் டார்ககெட் என்கிறார்கள். மேலும் திமுகவை பலவீனப்படுத்தி வலுவான கூட்டணியுடன் களம் இறங்க அதிமுக போடும் பிளானுக்கு திருமாவை பயன்படுத்திக் கொள்ளும் வியூகமாக ராமசாமி படையாச்சியால் விழா இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இதே போல் ஏற்கனவே பாமக வன்னியர்கள் வாக்கு வங்கியை பலமாக வைத்துள்ளது. இந்த சூழலில் அதிமுக ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைத்திருப்பதே வன்னியர்கள் பார்வையை அதிமுக பக்கம் திருப்ப, அப்படி இருக்கையில் அந்த விழாவிற்கு பாமக எதற்கு என்று கூட அக்கட்சிதலைமை நினைத்திருக்கலாம்.