Asianet News TamilAsianet News Tamil

கொலை, கொள்ளைகளைத் தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு எப்போது? - அன்புமணி நறுக் கேள்வி..

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க ஒரே தீர்வு புதிய சட்டமே தவிர, உச்சநீதிமன்ற மேல்முறையீடு அல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி புதிய தடை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

PMK Anbumani Ramadoss Statement - Online Rummy Ban
Author
Tamilnádu, First Published Apr 29, 2022, 2:45 PM IST

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய குற்றங்களை செய்ய ஜெயராமனை தூண்டியது ஆன்லைன் சூதாட்டம் தான்.

சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ஜெயராமன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். அதற்கு மாநகராட்சிப் பணி மூலம் கிடைக்கும் ஊதியம் போதவில்லை என்பதால், நகைக்கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்லைனில் சூதாடுவதற்காக கொலைகளைச் செய்து கொள்ளையடித்தனர். இப்போது தொடர் சங்கிலிப் பறிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளைகளைத் தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு எப்போது?

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் தங்களின் தலைவர்களையும், உடமைகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடும். வாழ வேண்டிய இளைஞர்கள் குற்றவாளிகளாகக்கூடும். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு புதிய சட்டமே தவிர, உச்சநீதிமன்ற மேல்முறையீடு அல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி புதிய தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios