ஸ்டாலின் யார்? எதிர்க்கட்சித் தலைவர். அவரால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்ய முடியும். சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வர முடியும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.


சென்னை தி. நகரில் பாமக சார்பில் டாக்டர் ராமதாஸின் முத்து விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலினுக்கு ஓட்டுப் போட்டத்தைக் குறிப்பிட்டு அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகப் பேசினார்.
“மருத்துவர் ஐயாவின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான். ஸ்டாலினின் நோக்கம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். நான் முதல்வராக வேண்டும் என்பார். நாடாளுமன்றத் தேர்தலில் நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னதை நம்பி ஓட்டுப் போட்டீர்கள். ஸ்டாலின் யார்? எதிர்க்கட்சித் தலைவர். அவரால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்ய முடியும். சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வர முடியும். அவ்வளவுதான்.
திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அதை நம்பி நீங்கள் எல்லோரும் வாக்களித்தீர்கள். நிறையபேர் ஸ்டாலின் வாக்குறுதி சொன்ன பிறகு, நகையை அடமானம் வைத்து கடன் வாங்கினார்கள். கையெழுத்து போட்டு நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னார். இப்போது என்ன ஆனது? இந்த கடன்களை எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று ஸ்டாலினிடம் கேளுங்களேன். ஸ்டாலின் சொன்னதை சொன்னதை நம்பி ஓட்டுப் போட்டுவிட்டீர்களே. உங்கள் (மக்கள்) மீது எனக்குக் கோபம் வரவில்லை. இதையெல்லாம்  நம்பி ஓட்டு போட்டீர்களே என்று ஆதங்கம்தான் வருகிறது.
நாங்கள் தொலைநோக்குத் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதையெல்லாம் சுயநலத்துக்காகத் தெரிவிக்கவில்லை. தமிழகத்திலேயே நிழல் பட்ஜெட் போட்டவர்கள் நாங்கள் மட்டும்தான்.  நாங்கள் அங்கே மாறுகிறோம், இங்கே மாறுகிறோம் என்று கூறுவார்கள். நாங்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையெல்லாம் நினைக்கவில்லை. யார் வரக்கூடாது என்று நினைத்தோமோ, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம். மருத்துவர் அய்யா 30 ஆண்டுகள் கட்சி நடத்தியிருக்கிறார். 40 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருக்கிறார். பாமக என்ன வேண்டும் என்று அவருக்கு தெரியும்.”
இவ்வாறு அன்புமணி பேசினார்.