இந்தியாவில் கொரோன தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே தொற்று தீவிரமாக பரவியதை அடுத்து 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே 3ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), மத்திய பள்ளி தேர்வு கவுன்சில் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், போதிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் நடந்துள்ள நிலையில், ஜூனில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சிபிஎஸ்இ  பொதுத்தேர்வுகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதா? என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னர் பொதுத்தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.