பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் பற்றியும் பிரதமர் பதவிக்கான ரேஸில் மோடி - ராகுல் காந்தி இடையேயான போட்டி உள்ளிட்டவற்றை வைத்து நாடு முழுவதும் நேஷன் சர்வே 2021 என்ற தலைப்பில் ஐஏஎன்எஸ் - சிவோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளி 30 ஆயிரம் பேரிடம் நடந்த இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடிதான் சிறப்பானவர் என 59.22 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்திக்கு 25.62 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு இருந்தபோதும், தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.   கேரளாவில் ராகுல் காந்திக்கு 54.28 சதவீதம் பேரும் தமிழகத்தில் 48.26 பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.


 2019  நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடு முழுவதும் பாஜக கூட்டணி  வெற்றி பெற்ற நிலையில், தமிழகம், கேரளாவில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.