மாமல்லபுர சிற்பங்களை வியந்து பிரதமர் மோடி தமிழில் அடுத்தடுத்து ட்வீட் போட்டு அசத்தியிருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இடையேயான முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாமல்லபுர சந்திப்புக்காக இரு தலைவர்களும் சென்னை வந்தனர். மாலை 4.30 மணி அளவில் பிரதமர் மோடி அர்ஜூனன் தபசு உள்ள இடத்துக்கு வந்தார். சீன அதிபர் ஜின்பிங் 5 மணியளவில் அங்கே வந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற பிரதமர் மோடி அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் என ஒவ்வொன்றையும் சுற்றி காட்டினார். பிறகு இரவு கலை நிகழ்ச்சிகள், இரவு விருந்துக்கு பிறகு முதல் நாள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி பிரதமர் மோடி தமிழ், ஆங்கிலம். சீனாவின் மாண்டலின் ஆகிய மொழிகளில் ட்வீட் போட்டார்.   அதில், “மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. @UNESCO பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின்மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது. அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம்.
ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள். இந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன. வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.” என்று மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.