வரும் ஞாயிற்றுக் கிழமை சோதனை முறையில் மக்களே ஊரங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் இதுவரை உயிரிழதுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகிறார்.
அதில், “உலகப் போரைவிட பல மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் சவாலாகவும் விளங்கிவருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள அறிவியல் உதவவில்லை. நம்மை நாமே தற்காதுக்குக் கொள்வதுதான் ஒரே வழி. இந்த வைரஸ் இந்தியாவை தாக்காது என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக் கூடாது. நம்மை நாமே பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. எனவே அடுத்த சில வாரங்கள் உங்களின் நேரம் எனக்கு தேவைப்படுகிறது. போர்க் காலங்களில் இரவு நேரத்தில் வெளியே வர உள்ள தடை போல தற்போது இருக்க வேண்டும்.


மக்கள் தங்களை தாங்களே வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பரீசார்த்த முறையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (22ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தவிர வேறு யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும். மிகவும் அத்தியாவசிய பணியைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வரக்கூடாது. மக்கள் ஊரடங்கு முறைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க ஒவ்வொருவரும் சமூக பரவலை தவிர்க்க வேண்டும். மக்கள் ஊரடங்கு அமலாவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். நாம் நலமாக இருந்தால்தான் உலகம் நன்றாக இருக்கும்” என்று பிரதமர் மோடி பேசினார்.