ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு நெருக்கடி தரும் வகையில் ஆபரேஷன் கருடாவை என்ற அஸ்திரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக தான் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் வீட்டில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

தெலுங்கு தேசம் கட்சி எம்பி சி.எம்.ரமேசுக்கு சொந்தமான ஐதராபாத், கடப்பாவில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கடப்பா மற்றும் ஐதராபாத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையை சேர்ந்த 60 பேர் கொண்ட குழுவினர்  சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடப்பாவில் உள்ள எம்பி வீட்டில் மட்டும் 15 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ‘நாடு முழுவதும் வருமானவரித்துறை சோதனை எந்தெந்த  பகுதிகளில் நடக்கிறது? ஏன் நடக்கிறது? மற்றும் ஆந்திராவில் நடக்கும் சோதனை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறைக்கு எம்பி ரமேஷ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில் நோட்டீஸ் வழங்கிய 3 நாட்களிலேயே அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஒரு வாரத்துக்கு முன்பு இதேபோல் நகராட்சிகள் துறை அமைச்சர் நாராயணா, பீதர் மஸ்தான் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சுஜிநாத் சவுத்ரி வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மத்தியில் உள்ள மோடி அரசின் ஆபரேஷன் கருடா திட்டத்தின் ஒரு பாகமே ஆந்திராவில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எந்த மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.