முழுப்பலத்துடன் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என பிரதமர் மோடி- அமித்ஷா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மக்களவைக்கான இறுதிக் கட்ட தேர்தல் வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்று மாலை அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனையொட்டி டெல்லியில் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அதில், ’பிரதமர் தலைமையின் கீழ் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். பாஜக ஆட்சியில் கோடிக்கணக்கான ஏழைகள் பயன் பெற்றுள்ளனர். எங்கள் மீது மக்கள் ஒருமித்த கருத்து வைத்துள்ளனர். 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டி பாஜக அரசு சிறப்பான சாதனை படைத்துள்ளது. நமது ஜனநாயகம் அனைவருக்கும் ஊக்கமளிப்பது. அதனை நாம் கொண்டாட வேண்டும். நாங்கள் முழுப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். நாட்டின் நிர்வாக முறைகளில் நாங்கள் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம். ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்

அதனை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். ஊழலும், பணவீக்கமும்  பாஜக ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. ஐபிஎல் போட்டிகள் மற்றும் பண்டிகைகளுக்கு இடையே தேர்தல் நடைபெற்றுள்ளது. பரப்புரையின் போது திட்டமிட்ட ஒரு கூட்டத்தைக் கூட ரத்து செய்யவில்லை. தேர்தல் பரப்புரையை சிறப்பாக செய்தவர்களுக்கு வாழ்த்துகள்’’ என இருவரும் தெரிவித்தனர்.

 

தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டதால் இனி நான் சற்று இளைப்பாரலாம்’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.  5 ஆண்டுகளில் முதல்முறையாக மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.