மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதை ஒட்டி ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் பிரதமர் மோடி.

பிரதமர் பதவியேற்ற பிறகு செய்தியாளர்கள் சந்திப்பை கூடுமானவரை தவிர்த்து வந்த மோடி இன்று அமித் ஷாவுடன் கூட்டாக சந்தித்தார். பொதுவான தேர்தல் கணிப்புகள் பா.ஜ.க 230க்கும் குறைவான இடங்களையே பிடிக்கும் என்று கணித்திருந்ததாலோ அல்லது தொடர்ச்சியான தேர்தல் பிரச்சாரம் காரணமாகவோ மிகவும் சோர்வாகக் காணப்பட்டார் மோடி.

இன்னும் சில நிமிடங்களில் பிரச்சாரம் முடிவடைய இருப்பதால் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உருக்கமாகப் பேட்டி அளிக்க ஆரம்பித்த மோடி கமறலான குரலில் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே உருக்கம் வைத்துக் கொண்டு பேசினார்.

கடந்த 5 ஆண்டுகளில் பல தடைகளைத் தாண்டி நாங்கள் எவ்வளவோ சாதனைகள் புரிந்துள்ளதை நினைத்துப் பெருமை கொள்கிறோம். அதனால் இந்திய மக்களின் ஆசி எங்களுக்கு உண்டு என்பதை நிச்சயமாக நம்புகிறேன். அடுத்தும் எங்கள் ஆட்சிதான் என்பதை இந்திய மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் துவங்குவதற்கு முன்பே மக்கள் ஆதரவு எங்களுக்கு அமோகமாக இருந்தது. அதற்குக் காரணம் எங்கள் ஆட்சியில் அனைத்துத் திட்டங்களும் சொன்னபடி திட்டமிட்டு செய்து முடிக்கப்பட்டன. எனவே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம்’ என்பதை தனது பேட்டியில் தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தார் மோடி.