மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொலைகார வைரஸ் தொடர்ந்து தீவிரமாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ம்  உரையாற்றினார். அப்போது அவர் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அவர் 3 முறை முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசித்து இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த 11-ம் தேதி முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 3ம் தேதிக்கு பிறகும்  ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் சில மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை  நடத்தி வருகிறார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய்த்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் ஆகியவை பற்றியும், ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? என்பது குறித்தும் முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மேலும், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழக அரசு கட்டுப்படும் என்று முதல்வர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.