தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என தமிழக பாஜக தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நடந்த உரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பழைய நண்பர்களையும் வரவேற்க பாஜக தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், தருமபுரி ஆகிய 5 தொகுதிகளில் இருந்து மக்களவை தேர்தல் மற்றும் தேர்தல் பூத் கமிட்டி தொடர்பாக நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். உரையாடலை தொடங்கியதும் தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளைக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும், கட்டாயத்தின் அடிப்படையில் இருக்காது என்றார். அதிமுக, ரஜினி, திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, "பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தயாராக உள்ளது. அரசியல் கட்சிக்காக கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

தமிழகத்தில் கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பாஜக பின்பற்றும். பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றபோதிலும் கூட்டணியுடனே ஆட்சி அமைத்தது. இந்திய அரசியலில் 20 ஆண்டுக்கு முன் வெற்றிகரமான கூட்டணியை அமைத்தவர் வாஜ்பாய். தேர்தலில் வெற்றிபெற மக்களுடனான கூட்டணி தான் மிக முக்கியம். 

பாதுகாப்புத்துறையை இடைத்தர்கர்களின் கூடாரமாக காங்கிரஸ் கட்சி மாற்றிவிட்டது. இந்திய ராணுவத்துக்கு பெரும் பாதிப்பை காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்திவிட்டது. ரபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள் தாமதப்படுத்தி உள்ளார் என்றால் நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது. அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே" என்று அவர் தெரிவித்தார்.