அதானி, அம்பானி சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி உதவி! அதுக்கு இதுவே சாட்சி! இறங்கி அடிக்கும் KS.அழகிரி.!
அதானி உயர்வுக்காக, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். இதற்குப் பரிகாரமாக கார்பரேட்டுகள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 5,270 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ஜ.க. நன்கொடை பெற்றுள்ளது.

கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சாமானிய மக்கள் கடின உழைப்பில் சேமித்த பணத்தை தம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குறிப்பிட்ட கோடீசுவரர்கள் பயனடையும் வகையில் மோடி அரசின் கொள்கைகள் இருப்பதாக, ஒட்டுமொத்த தேசமும், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரும் கவலையடைந்துள்ளனர். எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற அரசு நிறுவனங்களில் அதானி குழுமத்தின் ஆபத்தான பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளுக்கு மோடி அரசு உதவியிருப்பது, எல்.ஐ.சி.யின் 29 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் 45 கோடி எஸ்.பி.ஐ. கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட இந்திய முதலீட்டாளர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.
இதையும் படிங்க;- Adani:அதானி நிலைமை இப்படியா ஆகணும்! பாதி சொத்தைக் காணோம்! டாப்-20யிலிருந்து துடைத்து எறியப்பட்டார்
எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. போன்ற பொது நிறுவனங்கள் தேசத்தின் கவுரவம் என்பதை நாம் அறிவோம். கோடிக்கணக்கான இந்தியர்களின் கடின உழைப்பில் கட்டமைக்கப்பட்டவை தான் இந்த நிறுவனங்கள். தன் நெருங்கிய நண்பருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு மோடி அரசு நிர்ப்பந்தித்துள்ளது. பெரும் தொகையை அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களில் எல்.ஐ.சி.யின் 39 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் 33 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) மற்றும் இந்தியாவின் பிற வங்கிகளிடமிருந்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதானி குழுமம் கடன் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட இந்திய பெரு நிறுவனத்துக்கும் எதிராக இருந்ததில்லை. முதலாளித்துவ தோழமைக்கு நாங்கள் எதிராக இருக்கிறோம். குறிப்பிட்ட கோடீசுவரர்கள் பயனடைய விதிகளை மாற்றும் கொள்கைக்கு நாங்கள் எதிராக உள்ளோம். நாங்கள் எப்போதும் ஏழைகள் மற்றும் சாதாரண மக்களின் பின்னே நிற்கிறோம். கோடிக்கணக்கான இந்தியர்கள் கடின உழைப்பால் சேமித்த பணத்தை, எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததின் மூலம், அந்த நிறுவனங்கள் சந்தை மதிப்பை இழந்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் போராடி வருகிறோம்.
இதையும் படிங்க;- LIC Share:எல்ஐசி- நிறுவனத்துக்கு கடந்த 5 நாட்களில் ரூ.65,400 கோடி இழப்பு: பங்கு மதிப்பு மளமளவென சரிவு
மேலும், இந்த விஷயத்தில் போராட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளுடன் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள எல்.ஐ.சி மறறும் எஸ்.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்கிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை 2023 பிப்ரவரி 6 ஆம் தேதி நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(1) ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்றக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும்.
(2) எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை அணி திரட்டிப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை கேட்டுக் கொள்கிறேன். கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.
இந்தியாவின் முதல் பெரிய கோடீசுவரராகவும், உலகத்தின் மூன்றாவது கோடீசுவரராகவும் உயர்ந்தவர் கவுதம் அதானி. சமீபத்தில் ஹின்டென்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்த பிறகு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு உலகப் பணக்காரர்கள் வரிசையில் 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி உயர்வுக்காக, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். இதற்குப் பரிகாரமாக கார்பரேட்டுகள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 5,270 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ஜ.க. நன்கொடை பெற்றுள்ளது. இத்தகைய ஊழல் பணத்தை சட்டப்பூர்வமாகப் பெற்று, பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இதை அம்பலப்படுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு பொதுமக்களிடம் விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.