நரேந்திர மோடி  இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில்  அவர் 52 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார் என்றும் அதற்காக  355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணித்து, உலகம் சுற்றும் தலைவராக மோடி பெயரெடுத்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 4 ஆண்டுகள் ஆட்சியில் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த  ஓருவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதன்படி, பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த வெளிநாட்டு பயணத்துக்காக இது வரை 355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு  ஏப்ரல்  மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணத்துக்குத்தான் அதிகம் செலவானதாகவும் ஆர்டிஐ தகவலில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக பிரதமர் மோடி இந்தியாவில்  இருப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் தான் அதிகமாக இருக்கிறார் என்றும், ஆதலால், அவருக்கு ஏதாவது ஒரு வெளிநாட்டில்  பிரதமர் அலுவலகத்தின் கிளையை தொடங்கிவிடலாம் என எதிர்கட்சிகள் கிண்டல் அடித்து வருகின்றன.  சிவசேனா கட்சித் தலைவர்  ஒரு கூட்டத்தில் பேசும்போது, மோடி எல்லா வெளிநாடுகளுக்கும் சென்று வந்துவிட்டார். இனி அவர் வேற்று கிரகத்துக்குத்தான் போக வேண்டும் என கலாய்த்தார்.

எதிர்கட்சிகள் கிண்டல் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் மோடியின் வெளிநாட்டு பயண அனுபவங்கள் உள்ளன. இனி அடுத்த சில நாட்களுக்கு எதிர்கட்சிகளின் விவாதப் பொருளாகிவிடுவார் மோடி.