எதிர்வரும் 10-ம் தேதியன்று திருப்பூர் பொதுக்கூட்டத்தில் முழங்க இருக்கிறார் மோடி. ஆனால் மதுரையில் அவர் பேசிய பேச்சை வைத்து நடத்தப்படும் அரசியல் விவாதங்கள் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. 

மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பி.ஜே.பி. பொதுக்கூட்டம்! என இரண்டு நிகழ்வுகளில் சமீபத்தில் கலந்து கொண்டார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் வெடிக்கு திரிகிள்ளப்பட்டு விட்ட நிலையில், தமிழ் வளர்த்த மண்ணில் தகிப்பாய் தகிப்பார் மோடி! என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகளை பெரிதாய் வசைபாடாமல், ஊழலுக்கு எதிராக முழங்கி ஆளுங்கட்சிக்கு மட்டும் ஷாக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

 

மோடியின் விசிட்டின் போது பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டு உறுதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தம்பிதுரை மற்றும் பொன்னையனின் பி.ஜே.பி.க்கு எதிரான சாடல்களால் அந்த எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டது. இரண்டு கட்சிகளுக்குள்ளும் எந்த ஒரு சுமூக சூழலும் உருவாகவில்லை. சொல்லப்போனால் பிரச்னைகளை எல்லாம் தாண்டி கூட்டணி அமைந்தாலும் கூட இரு கட்சிகளுக்குள்ளும் ஆங்காங்கே மோதலும், முறுக்கலும் வெடிக்காமல் இருக்காது என்று பேசப்படுகிறது. 

அதேவேளையில் கூட்டணிக்கு இன்னமும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து எந்த வித பாசிடீவ் சமிஞைகளும் வராத நிலையில், ஓவராய் அக்கட்சியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம்! என்று முடிவெடுத்துள்ளார்கள் தமிழக பி.ஜே.பி.யினர். அதேவேளையில், ”எதிர்கட்சிகளை மோடி விமர்சிக்கவேயில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் பி.ஜே.பி.யின் எதிரி தி.மு.க.தான் ஏன் அக்கட்சியை அவர் விமர்சிக்கவில்லை? இத்தனைக்கும் தன்னை ‘சாடிஸ்ட்! பாசிச மோடி’ என்றெல்லாம் ஸ்டாலின் விமர்சித்தும் கூட மோடி மெளனம் காத்தது ஏன்? அப்படியானால் தி.மு.க. தன் கூட்டணிக்கு வரவேண்டுமென இன்னமும் ஸ்டாலினை எதிர்பார்க்கிறாரா மோடி?’ என்று தமிழக பி.ஜே.பி. சைடிலிருந்தே கிளப்பிவிட்டுள்ளனர்.

 

இதுகுறித்து எழுந்திருக்கும் கேள்விகளுக்கு விடைதரும் பி.ஜே.பி.யின் மாநில பொதுச்செயலாளரான வானதி சீனிவாசன்...”கருணாநிதி உடல் சுகவீனமாக இருந்தபோது கோபாலபுரம் வீடு தேடி வந்து நலம் விசாரித்தார் மோடி. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அவருக்காக அவையை ஒத்தி வைத்தார். அரசியல் பாகுபாடு, பாரபட்சமெல்லாம் பார்க்காமல் கருணாநிதிக்கு செய்ய வேண்டிய  மரியாதைகளை சற்றுக் கூடுதலாகவே பெருந்தன்மையுடன் செய்திருக்கிறார் பிரதமர். இந்த தேசத்தின் பிரதமர் இவ்வளவு இறங்கி வந்த பின்னரும் கூட ஸ்டாலின் அவரை கடுமையாக் விமர்சனம் செய்து வருகிறார். 

ஆனாலும் அது பற்றி மோடி எதுவுமே பதில் சாடலாக பேசவில்லை. இதிலிருந்தே புரியவில்லையா யார் சிறந்த மனிதர் என்பது! மிகச் சிறந்த மனிதரான பிரதமரை புரிந்து கொள்ளுங்கள். அடிப்படையற்ற விமர்சனத்தை வைக்காதீர்கள். இன்று எங்களை விமர்சிக்கும் வைகோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க.வை விமர்சித்தார், மோடி பிரதமராக வேண்டுமென்று பிரசாரம் செய்தார். ஆனால் இன்று ஸ்டாலினுக்காக குரல் கொடுக்கிறார். நிலையற்ற கருத்துடைய மனிதர் வைகோ. ஆனால் அவரே மீண்டும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் நாள் வரும். விரைவில் அனைவரும் ஆச்சரியப்படும் கூட்டணி அமையும்.” என்றிருக்கிறார். 

தி.மு.க.வின் கூட்டணிக்கு மோடி காத்திருக்கிறாரா? என்று கேட்டால், தி.மு.க.வின் கூட்டணியிலுள்ள வைகோ எங்களை ஆதரிப்பார் விரைவில் என்று வானதி பதில் சொல்லியிருக்கிறார். இதன்படி தி.மு.க.வை மீண்டும் பி.ஜே.பி. நெருங்கப் பார்க்கிறது! என எடுத்துக் கொள்ளலாமா? என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதெல்லாம் எடப்பாடியாருக்கு ஹைஃபீவரை கிளப்பும் வேலையா?