தென்னிந்திய அரசியல் தலைவர்களில் மோடிக்கு ஆகவே ஆகாத நபரென்றால் அது ப.சிதம்பரம்தான். அவர் காங்கிரஸை சேர்ந்த புள்ளி என்பதால் மட்டுமல்ல, இயல்பிலேயே இருவருக்கும் இடையில் மரியாதை நிமித்தமான நட்பு கூட கிடையாது. வேறு யார் மீதும் எடுத்ததுக்கெல்லாம் பாய்ஞ்சு பறாண்டாத ப.சிதம்பரமும் மோடி என்றால் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிடுவார் வெளுத்தெடுக்க. 

இப்படித்தான் சமீபத்தில் மோடி கொடுத்த கெத்தான ஒரு பேட்டியை கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளி கொத்துக்கறி போட்டு, அவரது பில்ட் - அப்பை பஸ்பமாக்கிவிட்டார் சிதம்பரம். அதாவது, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் -2 வையும் பற்றி பெரிதாய் சிலாகித்துப் பேசினார். தனது ஆட்சியின் போது பாகிஸ்தானின் வால் ஒட்ட நறுக்கப்படுகிறது! எனும் ரேஞ்சுக்கு மோடி பேசித்தள்ளிவிட்டார். 
 
தேசிய அளவில் பிரதமரின் இந்த பரகாசுர பேச்சு வைராலகிய நிலையிலேயே அதற்கு எதிராக பேட்டி தட்டிய சிதம்பரம்....”பாகிஸ்தான் எனும் பக்கத்து நாடு நம்மை பார்த்து நடுங்கிட, மோடி எனும் தனி மனிதர்தான் காரணம்! என்று நினைத்தால் அது மாபெரும் பிழை. நம் ராணுவத்தின், பாதுகாப்பு படைகள் எப்போதுமே இதே தரமான, வலுவான நிலையில்தான் உள்ளன. 

1948, 1965, 19761 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் நடந்த போர்களில் நமது இந்தியாவே வென்றது. அப்போதெல்லாம் மோடியா பிரதமராக இருந்தார்? எனவே நமது முப்படைகளின் சாதனைக்கும், திறமைக்கும், வெற்றிக்கும், பலத்துக்கும் மோடி எனும் தனிநபர் காரணமே அல்ல.” என்று வெளுத்தெடுத்துவிட்டார். சிதம்பரத்தின் பேட்டி எந்த சிரமமும் இல்லாமல் தேசம் முழுக்க சென்றடைய மீடியாக்களும், சோஷியல் மீடியாக்களும் கைகொடுத்தன. தேர்தல் நேரத்தில் தனது அதிகார மூக்கை சேதப்படுத்தும் நோக்கோடு சிதம்பரம் பேசியிருப்பதால் மிகப்பெரிய கடுப்பில் இருக்கிறார் மோடி.