ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை ஆலந்தூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினரும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியை கண்டித்து அவர் சென்னை வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும் மற்ற இயக்கங்களின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

பிரதமர் மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், 9.35 மணியளவில் பிரதமர் மோடி தனி விமானத்தை சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தார்.

அதன்படி, பிரதமர் சென்னை விமான நிலையம் வந்த நேரத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில், பாரதிராஜா, ராம், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் சென்னை ஆலந்தூரில் குவிந்து பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.