’கழகத்தின் முதுகெலும்பு இவர்கள்தான் ! இந்த அணி  இல்லாமல் போயிருந்தால் வளைந்து சரிந்திருப்போம்.’ என்று கருணாநிதியா கரகர குரலில் புகழப்பெற்ற அணி தி.மு.க.வின் இளைஞரணி. எம்.ஜி.ஆரின் தாண்டவத்தால் பதின்மூன்று ஆண்டுகள் அரசியல் வனவாசம் சென்ற அக்கட்சியை மீண்டும் பதவி பரிபாலணத்துக்கு இழுத்து வந்தது இளைஞரணிதான். 

ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக இருந்தவரையில் ஏக துடிதுடிப்புடன் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் கழக பொருளாளராக பதவி உயர்வு பெற்ற ஸ்டாலின், இளைஞரணியின் மாநில செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் கொடுத்தார். அதோடு முடிந்து போனது அந்த அணியின் செயல்பாடுகள். ஆக்டீவ் அரசியலுக்கு சொஞ்சமும் பொருந்தி வராத சாமிநாதன் கையில் இந்த அணியை கொடுத்து, நாசம் செய்துவிட்டார் ஸ்டாலின்! என்று வெளிப்படையாகவே விமர்சித்தனர் சீனியர்கள். 
சாமிநாதன் மட்டுமல்ல, அவருக்கு கீழே அன்பில் மகேஷ், தாயகம் கவி, ஜின்னா, ஜோயல், பாரி உள்ளிட்ட சிலர் துணை செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களாவது ஒன்றுபட்டு செயல்பட்டு இந்த அணியை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம். 

ஆனால் அவர்களுக்குள் ஈகோ யுத்தம். சாமிநாதனுடன் இவர்கள் யாருமே எந்த நட்பும் வைத்துக் கொள்வதில்லை, சாமிநாதனோ இவர்களை தன் சகாக்களாக நினைத்து கட்சி வளர்க்க முயல்வதுமில்லை. சாமிநாதனின் சொந்த மாவட்டமான திருப்பூரிலேயே அன்பில் மகேஷை அழைத்து வந்து கூட்டம் போடுமளவுக்குதான், அதுவும் சாமிநாதனை அழைக்காமலே நடத்துமளவுக்குதான் லட்சணம் இருக்கிறது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்காமல் போனதற்கான முக்கிய காரணங்களில், இந்த இளைஞரணி கோமாவில் கிடக்கும் நிலையும் முக்கிய காரணம்.  இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அக்கட்சி சரிவை சந்தித்தால் அதற்கும் இளைஞரணியின் செயல்பாடின்மையே முக்கிய காரணம். 

எனவேதான் சாமிநாதனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,  இளைஞரணிக்கு உதயநிதியை மாநில செயலாளர் ஆக்கிட வேண்டும் எனும் குரல் தி.மு.க.வில் வலுத்துள்ளது. பல மாவட்டங்களில்  இருந்து கழக இளைஞரணியினர் இதற்காக கையெழுத்து இயக்கமே நடத்தி, ஸ்டாலினுக்கு அன்ப்பிட துவங்கிவிட்டனர். அவர்கள் அனைவருமே சாமிநாதனை ‘வெளியேறு’ என்கின்றனர். 

ஆனால் வழக்கம்போல் ஸ்டாலின் இதில் சொதப்பினால் இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாத நிலையைதான் அவர் அரசியலில் சந்திப்பார் என்று அவரது கட்சியினரே சபிக்கின்றனர்!