புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி உள்ளிட்ட 3 நதிகளின் நீரை தடுத்து இந்தியாவின் யமுனை ஆற்றை வளப்படுத்த பயன்படுத்தப்போவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியாக தெரிவித்துள்ளார். 

புல்வாமா தற்கொலை படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அங்கிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

 

மத்திய அரசின் இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கு ரூ.3 ஆயிரத்து 482.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
 
இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதால் யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.