மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார். அப்போது, நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமித்ஷா கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். ஆனால் இதுதொடர்பாக அவர் ஏதுவும் கருத்து கூறவில்லை. இதனையடுத்து, தனியார் ஓட்டலில் பாஜக நிர்வாகிகளையும் அமித்ஷா சந்தித்து பேசினார். மேலும் பாஜக முன்னணி தலைவர்கள் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க மறுத்து வருகிறார்கள். 

இந்நிலையில், துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருகிற 14ம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். மேலும், அதிமுக உடனான தொகுதி பங்கீடும் உறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கும் அமித்ஷா அவரது உடல்நலம் குறித்தும் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்க போதில்லை என ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில் அவரது ஆதரவையும் கோருவார் என தெரிகிறது.