*    ரபேல் போர் விமான ஊழலில் உண்மை எப்போதும் வெல்லும். அந்த உண்மை மோடியை நிச்சயம் ஒரு நாள் சிறையில் தள்ளும்: ராகுல்காந்தி. 
(ரைட்டு! ஆனா அவருக்கு ஜெயில்ல வெல்கம் பார்ட்டி! கொடுக்கிறதுக்காக இன்னும் கொஞ்ச நாள்ள உங்க மச்சான் வதோரா நில பேர ஊழல்ல உள்ளே போயிடுவார்ன்னு சொல்லுறாங்களே மிஸ்டர் பப்புஜி! அதப்பத்தி ஏதாச்சும் ஆரூடம் உண்டா?)

*    விஜயகாந்த் உடல் நலன் பெற வேண்டியும், அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டியும் விஜயகாந்த் மகன் சிறப்பு பூஜை: செய்தி. 
(இந்த விருகம்பாக்கம் பக்கம்...பிரபாகரன், பிரபாகரன்னு ஒரு வீரரு, சூரரு, மானஸ்தரு நின்னுக்கிட்டு ‘எங்கப்பா  நூறு ஜெயலலிதாவுக்கு சமம். கூட்டணிக்காக எங்க காலை பிடிக்கிறாங்க!’ன்னு சவுண்டு விட்டாரே! அவரை எங்கேயாச்சும் பார்த்தீங்களா மக்களே?)

*   தி.மு.க. கூட்டணியில் இரண்டு முறை நின்று போட்டியிட்ட எங்களை கூட்டணி கட்சியாக மதிக்காமல் தோழமை கட்சியாகவே தி.மு.க. மதித்ததால் அங்கிருந்து வெளியே அ.தி.மு.க.வின் கூட்டணியில் இணைந்துள்ளேன்: என்.ஆர்.தனபாலன். 
(தல! நீங்க மரியாதை வேண்டி அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துட்டீங்க. இனி தினமும் காலையில நாலு முப்பது முதல் நாலு நாற்பத்தஞ்சு வரையில் பூரண கும்ப மரியாதையும், மாலை ஆறு ஐம்பது முதல் ஏழு அரை வரையில் பரிவட்டம் கட்டும் மரியாதையும் நடக்கும். இடையில பிற்பகல் லஞ்ச்க்கு அப்புறம் நீங்களா விருப்பப்பட்டால் உங்க மேலே கீர்த்தனைகள், ராகங்கள் பாடி அபிஷேகம் நடத்தப்படும். குஷியா இருங்க, குஜாலா இருங்க.)

*    பரங்கிமலையில் ரசிகர்களின் தள்ளுமுள்ளால் சாய இருந்த இரும்பு வேலியை தாங்கிப் பிடித்து ரசிகர்களை காப்பாற்றினார் விஜய். இணையத்தில் குவியும் பாராட்டுகள்: செய்தி. 
(சரி, சரி ஃப்ரீயா விடுங்க பாஸ். தளபதியோட எத்தனை படம் வந்த மறுநாளே விழுந்து வீணா போக இருந்தப்ப, ரசிகருங்க கைக்காசை  போட்டு தாங்கிப்பிடிச்சு ஓட்டலையா? அதுக்கு இது பிராயசித்தமுன்னு நினைச்சுக்கோங்க.)

*    அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றியே ஜெயலலிதாவுக்கு செலுத்தப்படும் பெரிய அஞ்சலியாக இருக்கும்: பியூஸ் கோயல். 
(ப்பார்றா, ரெண்டு மாசம் கூட ஆகல நம்ம பியூஸு தமிழ்நாட்டு பக்கம் வந்து போயி. ஆனா அதுக்குள்ள எம்பூட்டு சமத்தா நம்ம கழக கண்மணிகளாட்டமா சென்டிமெண்டு சட்னி தொட்டு பேச ஆரம்பிச்சுட்டாரு பாருங்க)