ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழகம் முழுதும் கடந்த நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தின் விளைவாக மெரினா கடற்கரை உள்ளிட்ட தமிழகம் முழுதும் திரண்ட லட்சக்கணக்கான தன்னெழுச்சியான இளைஞர்கள் கூட்டத்தை கண்ட தமிழக அரசு இறங்கி வந்துள்ளது.

அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் இரண்டு அமைச்சர்கள் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளனர்.


கடந்த சனிக்கிழமை அவனியாபுரத்தில் வைக்கப்பட்ட சிறு பொறி பாளமேட்டில் நெருப்பாகி , அடங்கா நல்லூரில் எரிய ஆரம்பித்து இன்று தமிழகம் முழுதும் போராட்ட தீ பெரும் ஜுவாலையாக கொழுந்து விட்டு எரிகிறது.


சென்னை மெரினா , கோவை கொடீஷியா மைதானத்தில் பத்தாயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் இறுதிவரை கலையாமல் உள்ளனர். தங்கள் போராட்டத்தை கைவிடாத இளைஞர்களால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. 


முதல்வர் ஓபிஎஸ் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டம் சூடு பிடிக்க பிடிக்க நிலைமை தீவிரமானதை கண்டு அரசு இறங்கி வந்துள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்ததை அடுத்து பேச்சு வார்த்தை துவங்கியது.


இது பற்றி பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:


இளைஞர்கள் உணர்வுகளை தமிழக அரசு மதிக்கின்றது. போராட்டம் என்பது ஜனநாயக அடிப்படையில் போராடுகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று அவர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

வரட்டும் அவர்கள் கருத்தை சொல்லட்டும் பிறகு எங்களது கருத்தை சொல்லுவோம். என்று தெரிவித்தார்.


இதையடுத்து 10 பேர் அடங்கிய போராட்டக்குழுவினர் அமைச்சர் ஜெயகுமார் இல்லத்துக்கு போலீசாரின் டெம்போ டிராவலர் வேனில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை வாசல் வரை வந்து அமைச்சர் பாண்டியராஜன் அழைத்து சென்றார்.


பின்னர் பேச்சு வார்த்தை துவங்கியது.