மக்களவை தேர்தலில் வாரிசுகளுக்கு சீட்டை வாங்கிக் கொடுத்து விட்டு மகன்களை வெற்றிபெற வைக்க அரசியல் தந்தைகள் வாக்காளர்களிடம் கெஞ்சி கூத்தாடி வருகின்றனர்.

 

தேனியில் தனது மகனுக்கு சீட் வாங்கிக் கொடுத்த  துணை முதல்வர் ஓ.பி.எஸ், எப்படியாவது ஜெயிக்க வைத்து விடுங்கள். என் மகன் உங்களுக்கு எப்போதும் நன்றிக்கு உரியவனாக இருப்பான் என பார்ப்பவர்களை எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறார். அது மட்டுமா? ரவீந்திரநாத் பிரச்சாரம் செய்யச் செல்லும் அனைத்து இடங்களுக்கும் அவரது மனைவியும், தாயாரும் வாக்கு கேட்டு சென்று வருகின்றனர். 

ராஜன் செல்லப்பா மதுரை தொகுதியில் தனது மகன் சத்யனுக்காக வீதி வீதியாக வாக்குக் கேட்டு வருகிறார். தனக்காகக் கூட அவர் இப்படி ஓவ்வொரு வீடாக ஏறி இறங்கியதில்லை என்கிறார்கள் மதுரை உடன் பிறப்புகள்.  அதேபோல் திருநெல்வேலி தொகுதியில் முன்னாள் சபாநாயகரான, பிஹெச்.பாண்டியன் தனது மகன் மனோஜ் பாண்டியன் அதிமுக சார்பில் சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். நெல்லை தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்லும் பி.ஹெச்.பாண்டியன், "45 ஆண்டுகளாக இந்த தொகுதியை எனக்கு நன்றாகத் தெரியும். என்னைப்பற்றியும் இந்தத் தொகுதியினர் நன்கு அறிவார்கள். 

எனக்கு இப்போ உடம்பு சரியில்லை. அதனால 2 ஆண்டுகளாக வெளியில் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறேன். தேர்தல் முடிவு வரும்வரை நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்கு தெரியாது. அதனால் என்னை மனதில் வைத்தாவது எனது மகன் மனோஜ் பாண்டியனை வெற்றி பெற செய்யுங்கள்" என மன்றாடி வருகிறார். 

தென் சென்னையில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தனை வெற்றிபெற வைக்க காசை தண்ணீராக இறைத்து வருகிறார். நிர்வாகிகளிடம் எப்பாடியாவது ஜெயவர்தனை ஜெயிக்க வைத்து விடுங்கள். அப்படி வெற்றிபெற்றால் அவன் மத்திய அமைச்சர் ஆவது உறுதி  எனக் கேட்டுக் கொண்டு வருகிறார். 

இது ஒருபுறம் இருக்க, திமுக பொருளாளர் துரைமுருகன், "என் மகன் செய்றானோ இல்லையோ, உயிரை தந்தாவது உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவான் இந்த துரைமுருகன்’ எனக் கேட்டு வாக்காளர்களிடம் கண்ணீர் சிந்தாத குறையாக கெஞ்சி வருகிறார். அதுமட்டுமல்ல தனது மகனுக்கு அதிக வாக்குகளை வாங்கித் தரும்பவர்களுக்கு 50 லட்சம் பணம் பரிசாக வழங்கப்படும் என மாபெரும் ஆஃபரை வழங்கி இருக்கிறார் துரை முருகன்.