நாடு முழுதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலானது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் மறைமுக வரி விகிதத்தை முறைப்படுத்தி நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் பொருட்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

0%, 5%, 12%, 18%, 28% என 5 விதமான ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கும் 115 நாடுகளில், அதிகமான வரி கட்டமைப்பு விதிக்கும் நாடு இந்தியா தான். ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போதும் வரி விகிதங்கள் குறைக்கப்படுவதோடு, பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. தெளிவான வரி விதிப்பாக இல்லாமல், பல சிக்கல்கள் நிறைந்ததாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மாநிலங்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் ஆகியவை ஜிஎஸ்டி வரிவரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவந்தால், பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும் என்பதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

அதனால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைப்பேன். அதேநேரத்தில் வாடிக்கையாளர்களும் நியாயமான முறையில் பெட்ரோலிய பொருட்களை வாங்க வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது அதன் தாக்கம் இந்தியாவில் இருக்கவே செய்யும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.