Petrol price per litter 81 rupees in mumbai
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் மேலே போய்க் கொண்டிருக்கும் நிலையில் மும்பையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வந்தன.
இதைத் தொடர்ந்து அன்றாட சந்தைவிலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல்,டீசல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.12 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.73 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்றுகாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் நேற்றைய விலையிலிருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.12 காசுகளாகவும், டீசல் விலையில் 8 காசுகள் அதிகரித்து ரூ.67.73காசுகளாகவும் உள்ளன.
அதே நேரத்தில் மும்பையில் இன்று காலை வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலை 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
