பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் ஏதாவது சில மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றால் மட்டும் பெட்ரோல் விலை சற்று கட்டுக்குள் இருக்கும். தேர்தல் முடிந்துவிட்டால் மீண்டும் விலை ஏறிவிடும்.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 ஆம் தேதி மாலை முதல் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் முதல்  10 ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயத்தில், மே 23-ந் தேதி மாலையில், லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருகிறது என்று அவா குறிப்பிட்டுள்ளார்.