petrol diesel price hike in india

தொடர்ந்து 6 ஆவது நாளாக பெட்ரோல் , டீசல் விலை எகிறியுள்ளது. இன்று கிட்டத்தட்ட பெட்ரோல் விலை 80 ரூபாயைத் தொட்டுள்ளது, நாளுக்கு நாள் விலை கடுமையாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்களை கடந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போதுள்ளதை விட இன்னும் சில ரூபாய்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பீப்பாய் 85 டாலர்கள் என்ற நிலையை அடைந்து விட்டால் டெல்லியில் சில்லரை விற்பனையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89 என்ற அளவிற்கு உயர்ந்து விடும். 

இதேபோன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் இந்த விலை உயர்வின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலையானது 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. தற்போது மீண்டும் அதே விலையைத் தொட்டுள்ளது.